வெறும் 21 நாள்களில் தண்டனை: ஆந்திரத்தின் திஷா சட்டம் பற்றி அ முதல் ஃ வரை

ஆந்திரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 21 நாள்களில் தண்டனை வழங்க வகுக்கும் திஷா சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
வெறும் 21 நாள்களில் தண்டனை: ஆந்திரத்தின் திஷா சட்டம் பற்றி அ முதல் ஃ வரை


விஜயவாடா: ஆந்திரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 21 நாள்களில் தண்டனை வழங்க வகுக்கும் திஷா சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஆனால், திஷா சட்டத்தைச் செயல்முறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டுவிட்டது.

திஷா காவல்நிலையம், ஒன்-ஸ்டாப் மையங்கள், புதிய தடயவியல் ஆய்வுக் கூடம், சிறப்பு நீதிமன்றம் மற்றும் திஷா செயலி என அனைத்தும் தயாராக உள்ளன.

இந்த திஷா சட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்து, தண்டனை வழங்குவது என அனைத்தும் 21 நாள்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் திஷா காவல்நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்கள் குறித்து எவ்வாறு விசாரணை தொடங்கி, முடிவடையும் என்பது வரை அனைத்தையும் கிருத்திகா சுக்லா விவரமாகக் கூறுகிறார்.

பாலியல் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கும், 21 நாள்களில் விசாரணை நடந்து முடிந்து மரண தண்டனைகூட வழங்க திஷா சட்டம் வகை செய்கிறது.

இந்த சட்டத்தின்படி, புலன் விசாரணை 7 நாள்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டு, வழக்கு விசாரணை 14 அலுவல் நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும். இந்த திஷா சட்டத்தின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கலாம்.

14 நாள்களில் தீர்ப்பு
காவல்நிலையத்தில் 7 வேலை நாள்களில் புலன் விசாரணை நடத்தப்பட்டு, இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அங்கு நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு, 14 வேலை நாள்களில் தீர்ப்பு வழங்கப்படும். சிறப்பு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையைச் சிறைத் துறை நிறைவேற்றும்.

தீர்ப்பு வழங்கப்பட்டு 60 நாள்களுக்குள் குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், அந்த வழக்கிலும், 45 வேலை நாள்களுக்குள் மேல் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க வேண்டும். திஷா சட்டப்படி, மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது. 

அதேசமயம், இந்த திஷா சட்டம், மிக மோசமான குற்றங்களுக்கும், நேரடியான சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் இருக்கும் குற்றங்களுக்குமே பொருந்தும்.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக வாதாடும் வழக்குரைஞர்களுக்கு மாநில அரசே ஊதியம் வழங்கும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 72 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, சுமார் ரூ.87.125 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் தங்குவதற்கு தற்காலிகத் தங்குமிடங்களும் மாநில அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற சட்டத்தை இயற்ற விரும்பும் மகாராஷ்டிர அரசிடம், இந்த அரசாணை தொடர்பான நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்த சட்டத்துக்கு 21 நாள்கள் கால அவகாசம் நிர்ணயித்துள்ளோம். மகாராஷ்டிரத்தில் 100 நாள்கள் கால அவகாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் கிருத்திகா கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com