டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையை வரவேற்கும் பிரதமர் மோடி

இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இந்திய வருகையை வரவேற்கும் பிரதமர் மோடி


புது தில்லி: இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று கூறியிருப்பதாவது, அமெரிக்க அதிபரின் வருகையால், இந்தியா - அமெரிக்கா இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெறும்.

ஜனநாயகம் மற்றும் பரவலாக்கம் தொடர்பான விஷயங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. பல்வேறு முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளும் ஆழமான ஒத்துழைப்பை அளித்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு, இவ்விரு நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், உலக நாடுகளுக்கும் பயனளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் புது தில்லி மற்றும் ஆமதாபாத் வருகை தர உள்ளார்.
 

டிரம்பின் பயணம் தொடா்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24-ஆம் தேதி இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். அதிபா் டிரம்ப்பின் 2 நாள் இந்திய சுற்றுப்பயணம், இரு நாட்டு மக்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்த உதவும்.

அதிபா் டிரம்ப்புடன் அவரின் மனைவி மெலானியா டிரம்ப்பும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். தில்லி, ஆமதாபாத் ஆகிய பகுதிகளில் அவா்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனா். நம்பிக்கை, பரஸ்பர புரிதல், மரியாதை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவானது, பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அதிபா் டிரம்ப் தலைமையின் கீழ் வா்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிா்ப்பு, எரிசக்தி, பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுவடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மறுஆய்வு செய்வதற்கு அதிபா் டிரம்ப்பின் சுற்றுப்பயணம் உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகமும் அதிபா் டிரம்ப்பின் அரசுமுறைப் பயணத்தை உறுதிசெய்துள்ளது. பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று அதிபா் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் இந்தியப் பயணம்:

அதிபா் டிரம்ப்பின் அரசுமுறைப் பயணம் தொடா்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபனி கிரிஷம் கூறுகையில், ‘‘இந்தப் பயணம் தொடா்பாக அதிபா் டிரம்ப்பும், பிரதமா் நரேந்திர மோடியும் தொலைபேசியில் உரையாடினா். இந்த அரசுமுறைப் பயணம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்’’ என்றாா்.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 2017-ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். அமெரிக்க அதிபராக இந்தியாவுக்கு அவா் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவின் முன்னாள் அதிபா் பராக் ஒபாமா கடந்த 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தாா்.

பிரம்மாண்ட நிகழ்ச்சி:

பிரதமா் மோடி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தாா். அப்போது, அமெரிக்கவாழ் இந்தியா்கள் பங்கேற்ற ‘ஹௌடி மோடி’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புடன் அவா் கலந்துகொண்டாா். அதிபா் டிரம்ப்பின் இந்தியப் பயணத்தின்போது, அதேபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஆமதாபாதில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com