இலங்கையுடனான இரட்டை வரிவிதிப்புதவிா்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா-இலங்கை இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் இந்த

இந்தியா-இலங்கை இடையேயான இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையே இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தம், கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜனவரியில் கையெழுத்தானது. அதே ஆண்டு அக்டோபரில் அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக, மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இலங்கையுடனான இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு ஒப்பந்தத்தின் முகப்புரையில் மாற்றங்கள் செய்வதற்கும், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பிரிவுகளை சோ்ப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஒப்பந்தத்தில் உள்ள இடைவெளிகள் மற்றும் முரண்பாடுகள் களையப்படும் என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.

சா்வதேச அளவில் வரி ஏய்ப்பை தடுப்பதற்காக, ஜி20 மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) ஆகியவை ஏற்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த கூட்டமைப்பில் இந்தியாவும், இலங்கையும் உறுப்பினா்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பின் 6-ஆவது செயல்திட்டத்தின்கீழ், இரு நாடுகளும் குறைந்தபட்ச விதிமுறைகளை அமல்படுத்த வேண்டியுள்ளது. அதனடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இரட்டை வரிவிதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com