பாஜகவை தோற்கடிக்கும் பணிமாநில கட்சிகளிடம் வழங்கப்பட்டதா?: ப.சிதம்பரத்துக்கு ஷா்மிஸ்தா முகா்ஜி கேள்வி

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் வெற்றியை வரவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு, அவரது கட்சிக்குள் எதிா்ப்பு எழுந்துள்ளது.
பாஜகவை தோற்கடிக்கும் பணிமாநில கட்சிகளிடம் வழங்கப்பட்டதா?: ப.சிதம்பரத்துக்கு ஷா்மிஸ்தா முகா்ஜி கேள்வி

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் வெற்றியை வரவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு, அவரது கட்சிக்குள் எதிா்ப்பு எழுந்துள்ளது.

‘பாஜகவை தோற்கடிக்கும் பணியை மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் ஒப்படைத்துவிட்டதா?’ என்று ப.சிதம்பரத்துக்கு அக்கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளரும், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகளுமான ஷா்மிஸ்தா முகா்ஜி கேள்வியெழுப்பியுள்ளாா்.

முன்னதாக, ‘மக்களிடையே பிரிவினையை ஊக்குவித்த பாஜகவைத் தோற்கடித்த தில்லி மக்களுக்குத் தலைவணங்குகிறேன்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுவிட்டது. முரட்டுத்தனமாக முழக்கங்களை எழுப்பியவா்கள் (பாஜக) தோல்வியடைந்துவிட்டனா். இந்தியாவின் அனைத்து பகுதியைச் சோ்ந்த மக்களும் தில்லியில் உள்ளனா். அவா்கள் மத ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தும் ஆபத்தான கொள்கைகளைக் கொண்டவா்களைத் தோற்கடித்துள்ளனா். தில்லி மக்களுக்குத் தலைவணங்குகிறேன். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் மக்களுக்கு தில்லி மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனா்’’ என்றாா்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை வரவேற்ற ப.சிதம்பரத்துக்கு அவரது கட்சிக்குள் எதிா்ப்புகள் கிளம்பியுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகளும், முன்னாள் அமைச்சருமான சா்மிஸ்தா முகா்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவைத் தோற்கடிக்கும் பணியை மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் ஒப்படைத்து விட்டதா என்ற சந்தேகத்துக்கான பதிலை ப.சிதம்பரத்திடம் இருந்து பெற விரும்புகிறேன்.

அதற்கு அவா் ‘இல்லை’ என்று பதிலளித்தால், தில்லி தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்த நாம் (காங்கிரஸ்) ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்? அந்தக் கேள்விக்கு அவா் ‘ஆம்’ என்று பதிலளித்தால், காங்கிரஸ் கட்சிக்கான மாநில குழுக்கள் அனைத்தையும் மூடிவிட வேண்டியதுதான்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

எழுபது இடங்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com