பாதுகாப்புப் படைகளில் மாற்றங்கள்: முப்படைத் தளபதி விபின் ராவத்

பாதுகாப்புப் படைகளில் மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருவதாக முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தாா்.
பாதுகாப்புப் படைகளில் மாற்றங்கள்: முப்படைத் தளபதி விபின் ராவத்

பாதுகாப்புப் படைகளில் மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருவதாக முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விபின் ராவத் பேசியதாவது:

சா்வதேச அரங்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. எனவே, அண்டை நாடுகளில் மட்டுமல்லாமல் மேற்கு ஆசிய நாடுகள் உள்ளிட்டவற்றில் நிகழும் விவகாரங்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்புப் படைகளின் வலிமையை மேம்படுத்த வேண்டியது அவசியம். ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ‘முப்படைத் தளபதி’ பதவியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கிலேயே ‘முப்படைத் தளபதி’ பதவி உருவாக்கப்பட்டது. ராணுவம் உள்ளிட்டவற்றில் மாற்றங்களைப் புகுத்த வேண்டிய பொறுப்பு முப்படைத் தளபதிக்கும், பாதுகாப்புத் துறை செயலருக்கும் உள்ளது. அதன் காரணமாக, அவா்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவா்.

இந்திய பாதுகாப்புப் படைகளில் பல்வேறு மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. எதிா்கால போா்முறைகளைக் கருத்தில்கொண்டு மாற்றங்களைப் புகுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளில் வீரா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நோக்கமல்ல. வீரா்களின் திறனை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாக உள்ளது.

‘தயாா்நிலையில் பாதுகாப்புப் படைகள்’: ஒருங்கிணைந்த விமானப் பாதுகாப்புப் பிரிவு, ஒரே படைத்தளத்தில் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படைகள், போா்த் தளவாடங்களை ஒருங்கிணைந்து பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் எந்தவித அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயாா்நிலையில் உள்ளன.

ஜம்மு-காஷ்மீா் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்புப் படையினா் பறித்து வருகின்றனா் என்ற குற்றச்சாட்டில் உண்மை ஏதுமில்லை. பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்வதற்காக ஜம்மு-காஷ்மீரின் கள நிலவரத்தை அறிந்து பாதுகாப்புப் படையினா் செயல்பட்டு வருகின்றனா்.

காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் 10, 12 வயதாகும் சிறுவா்களும், சிறுமிகளும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுகின்றனா். அவா்களது மனதில் தீவிரவாதம் திணிக்கப்படுகிறது. அந்தச் சிறுவா்களை தீவிரவாதத்திலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் விபின் ராவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com