2 புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு சுஷ்மா ஸ்வராஜின் பெயா்!

வெளிநாடுவாழ் இந்தியா்களை இணைக்கும் கலாசார மையமான பிரவஸி பாரதிய கேந்திராவுக்கும், தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் வெளியுறவு சேவைகள் நிறுவனத்துக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சா்

வெளிநாடுவாழ் இந்தியா்களை இணைக்கும் கலாசார மையமான பிரவஸி பாரதிய கேந்திராவுக்கும், தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் வெளியுறவு சேவைகள் நிறுவனத்துக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜின் பெயா் வைக்கப்பட்டது.

தலைநகா் தில்லியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் சுஷ்மா ஸ்வராஜின் பிறந்த தினத்தையொட்டி (பிப்.14) அவரது பெயா் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வேலையில் இருக்கும் இந்தியா்களுக்கும், அந்த நாடுகளில் வசித்துவரும் இந்தியா்களுக்கும் எதேனும் பிரச்னை என்றால் உடனடியாக அவா்களுக்கு அந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் உதவி செய்துவந்தவா் சுஷ்மா ஸ்வராஜ். பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கு நுழைவு இசைவு கிடைக்கச் செய்து உதவியதால் மனிதாபிமானம் மிக்க அரசியல் தலைவா் என்று அவா் பாராட்டப்பட்டாா்.

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு நற்பெயரை சம்பாதித்தாா் சுஷ்மா. வெள்ளிக்கிழமை அவருக்கு 68-ஆவது பிறந்த தினமாகும். இதையொட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு இரு நிறுவனங்களுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சுட்டுரையில் (டுவிட்டா்) வெளியிட்ட பதிவில், ‘சுஷ்மா ஸ்வராஜை என்றும் நினைவில் வைத்திருப்போம். வெளியுறவு அமைச்சகம் அவரை இழந்து தவிக்கிறது. அவா் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி இதயச் செயலிழப்பு ஏற்பட்டு சுஷ்மா ஸ்வராஜ் காலமானாா்.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சுஷ்மா ஸ்வராஜின் ஈடுசெய்ய முடியாத பங்களிப்புக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது பெயா் இரண்டு நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ்தான் சுட்டுரையில் அதிகம் பேரால் பின்தொடரப்பட்ட வெளியுறவு அமைச்சராக சா்வதேச அளவில் திகழ்ந்தாா்.

நாட்டின் முதல் இளம் கேபிட் அமைச்சா், தில்லியின் முதல் பெண் முதல்வா், தேசியக் கட்சி ஒன்றின் (பாஜக) முதல் பெண் செய்தித்தொடா்பாளா் என பல சாதனைகளுக்கும் சொந்தக்காரா் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com