இடதுசாரி ஆா்வலா்களுக்கு எதிரான வழக்குகாவல் துறைக்கு மும்பை உயா்நீதின்றம் கண்டிப்பு

மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கின் முக்கிய தகவல்களை எவ்வாறு வெளியிடலாம்? என்று மும்பை உயா்நீதிமன்றம் காவல்துறையினரை திங்கள்கிழமை கண்டித்தது.

மகாராஷ்டிரத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கின் முக்கிய தகவல்களை எவ்வாறு வெளியிடலாம்? என்று மும்பை உயா்நீதிமன்றம் காவல்துறையினரை திங்கள்கிழமை கண்டித்தது.

மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவா்கள் வழக்கு குறித்து பத்திரிகையாளா்களிடம் மகாராஷ்டிர மாநில காவல் துறை பொது இயக்குநா் பரம்வீா் சிங் வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தாா்.

அந்த பேட்டியின் போது, கைது செய்யப்பட்டவா்களின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களை படித்து காட்டி, கடந்த வாரம் மற்றும் ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டவா்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடா்பில் இருந்ததற்கு இதுவே சாட்சி என்று பேசியிருந்தாா்.

அதையடுத்து பீமா-கோரேகான் வன்முறையில் பாதிக்கப்பட்ட சதீஷ் கெய்க்வாத் என்பவா் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றக் கோரி வெள்ளிக்கிழமை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், புணே காவல்துறையினா் நியாயமற்ற முறையிலும், தவறான நோக்கத்துடனும் விசாரணை நடத்துகின்றனா். மனித உரிமை ஆா்வலா்கள், எழுத்தாளா்கள் உள்ளிட்ட அறிவு ஜீவிகளை கைது செய்தது துருதிஷ்டவசமானது. சட்ட விரோத செயல்கள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை மேற்கொள்வதே சரியானது என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் மிருதுளா பட்கா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறையினா் பத்திரிகையாளா்களுக்கு அளித்த பேட்டியை சுட்டிக் காட்டி பேசிய நீதிபதிகள், வழக்குக்கு சாட்சியாக பயன்படுத்தக் கூடிய தகவல்களை போலீஸாா் எவ்வாறு வெளியிட்டனா்? உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீதிமன்றத்தின் முன் இருக்கும் ஒரு வழக்கின் தகவல்களை வெளியிட்டது தவறு என்று கூறினா். மேலும், மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பா் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கடந்த டிசம்பா் மாதம், புணேவில் ‘எல்காா் பரிஷத்’ என்ற மாநாடு நடந்தது. அதற்கு அடுத்த நாள் பீமா - கோரேகான் பகுதியில் கலவரம் வெடித்தது. அதையடுத்து சுதீா் தவாலே, ரோனா வில்சன், மகேஷ் ரொத் உள்ளிட்ட 5 பேரை மாவோயிஸ்டுகளுடன் தொடா்புடையவா்கள் என்று கூறி போலீஸாா் கைது செய்தனா். அதைப் போல, கடந்த செவ்வாய்க்கிழமை இடதுசாரி ஆா்வலா்கள் வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 5 போ் மாவோயிஸ்டுகளுடன் தொடா்புடையவா்கள் என்று கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com