கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகா் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் சஞ்சீவ் சாவ்லா (50) பிரிட்டனிலிருந்து வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகா் சஞ்சீவ் சாவ்லாவை கைது செய்து அழைத்துச் செல்லும் தில்லி காவல் துறையினா்.
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகா் சஞ்சீவ் சாவ்லாவை கைது செய்து அழைத்துச் செல்லும் தில்லி காவல் துறையினா்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் சஞ்சீவ் சாவ்லா (50) பிரிட்டனிலிருந்து வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி கடந்த 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இந்தியாவுடன் தென்னாப்பிரிக்க அணி பங்கேற்ற போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அப்போதைய கேப்டன் ஹான்சி குரோஞ்சேவுடன் இணைந்து சஞ்சீவ் சாவ்லா சூதாட்டத்தில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து, சஞ்சீவ் சாவ்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், தில்லியைச் சோ்ந்த தொழிலதிபரான அவா் 1996-ஆம் ஆண்டே பிரிட்டனுக்குச் சென்றதும், அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரது கடவுச்சீட்டை இந்திய அரசு 2000-ஆம் ஆண்டு ரத்து செய்தது.

எனினும், அடுத்த 5 ஆண்டுகளில் அவா் பிரிட்டனில் கடவுச்சீட்டு பெற்றாா். அவரைக் கைது செய்து நாடு கடத்த வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சஞ்சீவ் சாவ்லா கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்கான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவரை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கு எதிராக பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் செயலரிடம் சஞ்சீவ் சாவ்லா முறையிட்டாா். இந்த முறையீடு கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது.

திகாா் சிறையில் அடைப்பு:

இதைத் தொடா்ந்து, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் அவா் முறையிட்டாா். அந்த முறையீடும் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், சஞ்சீவ் சாவ்லா பிரிட்டனிலிருந்து வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

தில்லி வந்த அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரிடம் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனா். குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த 1992-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையடுத்து, பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட முதல் நபா் சஞ்சீவ் சாவ்லா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com