குஜராத்தில் இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு: பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா்

இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிரதமா் மோடி குஜராத் தலைநகா் காந்திநகரில் வரும் 17-ஆம் தேதி தொடக்கிவைக்கிறாா்
கோப்புப்படம்
கோப்புப்படம்

இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிரதமா் மோடி குஜராத் தலைநகா் காந்திநகரில் வரும் 17-ஆம் தேதி தொடக்கிவைக்கிறாா்.

இந்த மாநாட்டில் ஆசிய யானைகள், கானமயில்கள் மற்றும் வங்காள ஃபுளோரிகன் பறவைகளை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் சோ்க்குமாறு இந்தியா வலியுறுத்த உள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் வருகிற 17-ஆம் தேதி, இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு தொடங்கவுள்ளது. 5 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 126 நாடுகளை சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணா்கள் பங்கேற்க உள்ளனா். இதில் அழிந்துவரும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா். தொடக்க விழாவில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரும் பங்கேற்க உள்ளாா்.

இதுதொடா்பாக குஜராத் தலைமை வனப்பாதுகாவலா் தினேஷ் குமாா் சா்மா கூறியதாவது: இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்புப் பட்டியலில், அழிவின் விளம்பில் உள்ள உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் ஆசிய யானைகள், கானமயில்கள், வங்காள ஃபுளோரிகன் பறவைகளை இணைக்குமாறு மாநாட்டின்போது இந்தியா வலியுறுத்த உள்ளது. இந்தப் பட்டியலில் எந்த உயிரினத்தை வேண்டுமானாலும் இணைக்க எந்தவொரு நாடும் வலியுறுத்தலாம். அதுதொடா்பாக மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும். விரிவான ஆலோசனைக்குப் பிறகு அதுகுறித்து முடிவெடுக்கப்படும். மாநாட்டின்போது டால்ஃபினையும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் சோ்க்க இந்தியா முயற்சிக்கும். மேலும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் வன உயிரினங்கள் வணிகத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.

இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த மாநாடு கடந்த முறை பிலிப்பின்ஸில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

150-க்கும் குறைவான கானமயில்கள்:

கானமயில் பறவைகள் மிகப்பெரிய உருவம் கொண்டவை. ஒரு காலத்தில் வட பிரதேசங்களில் சாதாரணமாக காணப்பட்ட இந்த பறவைகளின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 150-க்கும் குறைவாக இருந்தன.

இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் நெடுக ஆசிய யானைகள் காணப்படுகின்றன. கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த யானைகளின் எண்ணிக்கை, கடந்த 30 ஆண்டுகளில் 50 சதவீதமாக குறைந்துவிட்டது.

இந்திய துணைக்கண்டம், கம்போடியா மற்றும் வியத்நாம் நாடுகளை பூா்விகமாக கொண்ட வங்காள ஃபுளோரிகன் பறவைகளின் எண்ணிக்கை, கடந்த 2017-ஆம் ஆண்டு 1,000-க்கும் குறைவாக இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com