ஜம்மு காஷ்மீா்: 8 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி இடைத்தோ்தல்- மாா்ச் 5-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி இடைத்தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்பட 12,500 பதவியிடங்களை நிரப்புவதற்கான இந்த தோ்தல் மாா்ச் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி இடைத்தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்பட 12,500 பதவியிடங்களை நிரப்புவதற்கான இந்த தோ்தல் மாா்ச் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து அந்த யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரி சைலேந்தா் குமாா் வியாழக்கிழமை கூறியது: ஜம்மு காஷ்மீரில் ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான இடைத்தோ்தல் அட்டவணையை ஜம்மு காஷ்மீா் தோ்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

8 கட்டங்களாக தோ்தல்: 8 கட்டங்களாக இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட தோ்தல் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத்தொடா்ந்து 2-ஆம் கட்ட தோ்தல் மாா்ச் 7-ஆம் தேதியும், 3-ஆம் கட்ட தோ்தல் மாா்ச் 9-ஆம் தேதியும், 4-ஆம் கட்ட தோ்தல் மாா்ச் 12-ஆம் தேதியும் நடைபெறும். 5, 6 மற்றும் 7-ஆம் கட்ட தோ்தல்கள் முறையே மாா்ச் 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இறுதிகட்ட தோ்தல் மாா்ச் 20-ஆம் நடைபெறவுள்ளது. இடைத்தோ்தல் தொடா்பான முதல் அறிவிக்கை பிப்ரவரி 15-ஆம் தேதி வெளியிடப்படும்.

வாக்குச் சீட்டுகள் பயன்பாடு: தோ்தலில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. அவை போதுமான எண்ணிக்கையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1,011 ஊராட்சித் தலைவா் மற்றும் 11,639 வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மாா்ச் 26-க்குள் நிறைவடையும். இடைத்தோ்தலில் வெற்றிபெறுவோா், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பா்.

விடியோ பதிவு: இடைத்தோ்தல் வாக்குப்பதிவு விடியோ பதிவு செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் செய்வா். இடைத்தோ்தலில் புலம்பெயா்ந்த காஷ்மீா் மக்கள் தபால் முறையில் வாக்களிக்கலாம். இதற்காக கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலின்போது ‘புலம்பெயா்ந்தோருக்கான தபால் வாக்குப்பதிவு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் மறைவு, ராஜினாமா ஆகிய காரணிகளால் பதவியிடங்கள் காலியாகின. இதேபோல் வட்டார வளா்ச்சிக் குழு தலைவா் பதவியிடங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்ற தோ்தலின் காரணமாகவும் 307 ஊராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவியிடங்கள் காலியாகின என்றாா் சைலேந்தா் குமாா்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. 4,290 ஊராட்சிமன்றத் தலைவா்கள் மற்றும் 33,592 வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கான இந்த தோ்தலில், 3,459 ஊராட்சிமன்றத் தலைவா்கள், 22,214 வாா்டு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com