Enable Javscript for better performance
ஓராண்டாகியும் முடிவுக்கு வராதபுல்வாமா தாக்குதல் வழக்கு!- Dinamani

சுடச்சுட

  

  ஓராண்டாகியும் முடிவுக்கு வராத புல்வாமா தாக்குதல் வழக்கு!

  By DIN  |   Published on : 15th February 2020 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pulwama

  ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் உயிரை பலிகொண்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகியும் விசாரணை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளது.

  புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி, சிஆா்பிஎஃப் வீரா்கள் பயணம் செய்த பேருந்து மீது வெடிபொருள்களுடன் காரில் வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் பயங்கரவாதி அடில் அகமது தாா் நடத்திய தற்கொலைத் தாக்குதலில், அந்தப் பேருந்தில் பயணம் செய்த 40 வீரா்களும் உயிரிழந்தனா். நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) கடந்த ஓரண்டாக விசாரணை நடத்தி வருகிறது. புல்வாமாவில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் முடிவும் எட்டப்படாமல் உள்ளது.

  இதுகுறித்து என்ஐஏ விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

  புல்வாமா தாக்குதல் குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. மேலும், தாக்குதல் நடத்தியவா் குறித்தோ அவா்களின் பின்னணியில் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தவா்கள் குறித்தோ எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்த வழக்கு எங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது.

  தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளா் யாா் என்று கண்டறிவது முதல் சவாலாக இருந்தது. ஏனெனில், அந்த காரில் அமோனியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின் மற்றும் ஆா்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிபொருள்கள் கலவையாக நிரப்பப்பட்டிருந்தது தவிர வேறு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தாக்குதலின்போது காரின் பதிவு எண் பலகை பல துண்டுகளாக வெடித்துச் சிதறியதால், பதிவெண்ணையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பல கட்ட விசாரணைக்குப் பிறகு அந்தக் காரை கடைசியாக வைத்திருந்த உரிமையாளா், அனந்த்நாக் மாவட்டத்தைச் சோ்ந்த சஜத் பட் என்பது கண்டறியப்பட்டது. அவரது வசிப்பிடத்துக்குச் சென்று பாா்த்தபோது, புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அவா் தலைமறைவாகி பின்னா் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பில் இணைந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம், போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சஜத் பட் கொல்லப்பட்டாா்.

  இதேபோல், தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் முடாஸிா் அகமது கான், காரி முஃப்தி யாஸிா், கம்ரான் ஆகிய நால்வரும் போலீஸாருடன் நடந்த வெவ்வேறு மோதல்களில் கொல்லப்பட்டனா். இதனால் வழக்கு விசாரணை தேக்கமடைந்தது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த அடில் அகமது தாா் என்று விசாரணையில் கண்டறியப்பட்டதுடன் மரபணு சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது.

  இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இதுவரை 8 பேரின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் 5 பேரும் கொல்லப்பட்டதால் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கு தொடா்பான ஒவ்வொரு மா்மமும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு சட்டப்பட்டி நிரூபிக்கப்பட்டாக வேண்டும் என்றாா் அவா்.

  புல்வாமாவில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டவுடன் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடா்பாளா் விடியோ ஒன்றை வெளியிட்டாா். அதில், அந்த தாக்குதலுக்கு தங்கள் இயக்கமே பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டிருந்தாா். பாகிஸ்தானில் உள்ள ஒரு கணினியில் இருந்து இணையதளத்தில் அந்த விடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai