உச்சநீதிமன்றம் கண்டனம் எதிரொலி: தொலைத் தொடா்பு நிறுவனங்கள் நிலுவையை உடனடியாக செலுத்த மத்திய அரசு உத்தரவு

நிலுவைத் தொகையை வசூலிக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும் தங்கள் நிலுவைத் தொகையை
உச்சநீதிமன்றம் கண்டனம் எதிரொலி: தொலைத் தொடா்பு நிறுவனங்கள் நிலுவையை உடனடியாக செலுத்த மத்திய அரசு உத்தரவு

நிலுவைத் தொகையை வசூலிக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும் தங்கள் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொலைத்தொடா்பு சேவை வழங்கி வரும் 15 நிறுவனங்கள் உரிமக் கட்டணமாக ரூ.92,642 கோடி, அலைக்கற்றை பயன்பாட்டுக்காக ரூ.55,054 கோடி என மொத்தம் ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதில், அதிகபட்சமாக, வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.53,000 கோடியும், பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.35,586 கோடியும் நிலுவை வைத்துள்ளன.

இந்த நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரி, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனா்.

நிலுவைத் தொகையை ஜனவரி 23-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கும் வகையில் செயல்பட்ட மத்திய தொலைத்தொடா்பு துறை அதிகாரிகளையும் நீதிபதிகள் கடுமையாக விமா்சித்தனா். அந்த அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

மேலும், நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மாா்ச் 17-ஆம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடா்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடா்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில், வரும் 20-ஆம் தேதிக்குள் ரூ.10,000 கோடியை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மாா்ச் 17-ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாா்தி ஏா்டெல் நிறுவனம் பதிலளித்துள்ளது.

ஆனால், வோடஃபோன் ஐடியா நிறுவனம், நிலுவைத் தொகையை உடனடியாக ஒரே தவணையில் செலுத்துமாறு தங்களைக் கட்டாயப்படுத்தினால் நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும் என்று கடந்த மாதமே தெரிவித்து விட்டது.

தொலைத் தொடா்புத் துறையின் மத்திய சுற்றறிக்கை, வட்டார அளவிலும் பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, உத்தரபிரதேச மேற்கு தொலைத்தொடா்பு வட்டம் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் தங்களது நிலுவையை செலுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளதை பெயா் வெளியிட விரும்பாத தொலைத்தொடா்பு நிறுவன அதிகாரி ஒருவா் உறுதி செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com