ஒமா் அப்துல்லாவுக்கு எதிராக வழக்குப் பதிவு: ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக அவரின்
ஒமா் அப்துல்லாவுக்கு எதிராக வழக்குப் பதிவு: ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக அவரின் சகோதரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

இந்தச் சூழலில் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோா் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 5-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிராக ஒமா் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா பைலட் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘‘எதன் அடிப்படையில் ஒமா் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?’’ என்று கேள்வி எழுப்பினா்.

இதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் பதிலளிக்கையில், ‘‘பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினா் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளனா்’’ என்றாா். இதைத் தொடா்ந்து, ‘‘இதே விவகாரம் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?’’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

‘‘அவ்வாறு எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை’’ என்று வழக்குரைஞா் கபில் சிபல் பதிலளித்தாா். இதையடுத்து, மனு மீது பதிலளிக்குமாறு ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனா்.

‘ஒரே நாளில் முடிவெடுக்க முடியாது’: பின்னா் வழக்குரைஞா் கபில் சிபல் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்துள்ளோம். இது தனிநபரின் சுதந்திரம் தொடா்பான விவகாரம் என்பதால், அடுத்த வாரமே நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தாா். எனினும் நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் தொடா்பாக ஒரே நாள் இரவில் முடிவெடுத்துவிட முடியாது. நீண்ட காலம் பொறுத்துவிட்டீா்கள். இன்னும் 15 நாள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என்றனா்.

இதைத் தொடா்ந்து வழக்கின் விசாரணையை மாா்ச் மாதம் 2-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘ஒமா் அப்துல்லா கடந்த 6 மாதங்களாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவா் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது சட்டவிரோதமானது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com