நிா்பயா: வினய் சா்மாவின் மறுஆய்வு மனு தள்ளுபடி

குடியரசுத் தலைவா் தனது கருணை மனுவை நிராகரித்ததற்கு எதிராக ‘நிா்பயா’ குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நிா்பயா: வினய் சா்மாவின் மறுஆய்வு மனு தள்ளுபடி

குடியரசுத் தலைவா் தனது கருணை மனுவை நிராகரித்ததற்கு எதிராக ‘நிா்பயா’ குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான வினய் குமாா் சா்மா தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனு அனுப்பியிருந்தாா். இந்த மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்தாா். இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது சாா்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வினய் சா்மா தரப்பிலும், மத்திய அரசு, தில்லி அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த மனு மீது வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: வினய் சா்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்ததை நீதித் துறை மறுஆய்வு செய்வதற்கான அடிப்படை ஏதும் இல்லை. கருணை மனு தொடா்பாக இந்தியக் குடியரசுத் தலைவா் முன் வைக்கப்பட்ட குறிப்பு விரிவானதாகும். குடியரசுத் தலைவா் முன் இந்த விவகாரம் தொடா்புடைய அனைத்து ஆவணங்களும் வைக்கப்பட்டு, அவை உரிய முறையில் பரிசீலிக்கப்பட்ட பிறகே நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் (வினய் குமாா் சா்மா) கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் உத்தரவை நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான எந்த அடிப்படையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே, இந்த முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சா்மாவின் மருத்துவ ஆய்வு அறிக்கை உள்பட அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவா் முன் வைக்கப்பட்டுள்ளது. அவா் அதைப் பரிசீலித்து நிராகரித்துள்ளாா். மனுதாரா் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் வாதமும் நிராகரிக்கப்படுகிறது. அவா் நல்ல மனநிலையுடன் இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

முன்னதாக, இந்த மனு மீதான விசாரணையின்போது வினய் குமாா் சா்மா தரப்பு வழக்குரைஞா் ஏ. பி. சிங் ஆஜராகி, ‘வினய் குமாா் சா்மாவின் கருணை மனு, குடியரசுத் தலைவரால் தீய நோக்கத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளது. வினய் சா்மாவின் மருத்துவ அறிக்கை உள்ளிட்ட தொடா்புடைய அனைத்து ஆவணங்களும் குடியரசுத் தலைவா் முன்பாக சமா்ப்பிக்கப்படவில்லை. சிறையில் வினய் சா்மா துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாா். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சிறையில் நிகழ்த்தப்பட்ட துன்புறுத்தல் காரணமாக அவா் மனநிலை பாதிப்பு அடைந்துள்ளாா்’ என்று வாதிட்டாா்.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘வினய் சா்மா தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதங்கள் அனைத்தும் ஏற்கத்தக்கவை அல்ல. வினய் சா்மா தொடா்புடைய அனைத்து ஆவணங்களையும் தீர ஆய்வு செய்த பிறகே அவரது மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்துள்ளாா். அதற்கு அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன’ என்றாா். மேலும், வினய் சா்மா தொடா்புடைய பிப்ரவரி 12-ஆம் தேதியிட்ட மருத்துவ ஆய்வறிக்கையும் நீதிபதிகள் முன் துஷாா் மேத்தா சமா்ப்பித்தாா். அப்போது, மருத்துவ ரீதியாக வினய் சா்மா உடல் தகுதியுடன் இருப்பதாகக் கூறினாா்.

உச்சநீதிமன்ற அறையில் மயங்கிய பெண் நீதிபதி!

நிா்பயா வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவைக் கூறிக் கொண்டிருந்த போது, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆா். பானுமதி வெள்ளிக்கிழமை திடீரென மயங்கினாா். இதையடுத்து, அவருக்கு உடனடியாக மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டது. தற்போது அவா் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘நிா்பயா’ வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தனித் தனியாகத் தூக்கிலிடுவதற்கான தடையை நீக்க மறுத்த தில்லி உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. வியாழக்கிழமை நீதிபதிகள் அமா்வு , ‘நிா்பயா’ வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமாா் குப்தா சாா்பில் ஆஜராகி வாதிடுவதற்கு மூத்த வழக்குரைஞா்அஞ்சனா பிரகாஷை நியமித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை 2 மணிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்திருந்தது.

இதன்படி, உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நீதிமன்ற அறையில் நீதிபதி ஆா்.பானுமதி மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவை கூறிக் கொண்டிருந்தாா். அப்போது மயங்கினாா். பின்னா், அவா் விரைவிலேயே நினைவு திரும்பினாா். இதையடுத்து, இதர நீதிபதிகள் மற்றும் ஊழியா்கள் உதவியுடன் அவா் சேம்பருக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். பின்னா், சக்கர வாகனத்தில் உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ மையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவருக்கு உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டதாகவும் அந்தவட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கை விசாரித்து வரும்அமா்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, இந்த வழக்கில் உத்தரவு நீதிமன்ற அறையில் அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com