கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் வீடு திரும்பினார்

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் குணமடைந்ததையடுத்து, அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பினார்.
கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் வீடு திரும்பினார்


கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் குணமடைந்ததையடுத்து, அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பினார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த மூவரும் சீனாவில் இருந்து கேரளத்துக்குத் திரும்பியவர்கள். அவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு திரிச்சூர், ஆழப்புழா மற்றும் காசர்கோட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதில், ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த நபர் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பினார்.

இந்நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் தற்போது குணடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மூத்த சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"காசர்கோட்டைச் சேர்ந்தவரின் அடுத்தடுத்த இரண்டு ரத்த மாதிரிகள் மூலம் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். தற்போது திரிச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரியவந்தவுடன், அவர் வீடு திரும்புவதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும்" என்றார்.

இதனிடையே, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இன்று வெளியிட்ட அறிக்கையில்,

"பல்வேறு மாவட்டங்களில் 2,210 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 16 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,194 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com