Enable Javscript for better performance
சிஏஏ வாபஸ் இல்லை: பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டம்- Dinamani

சுடச்சுட

  

  சிஏஏ வாபஸ் இல்லை: பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டம்

  By  வாராணசி,  |   Published on : 17th February 2020 02:57 AM  |   அ+அ அ-   |    |  

  MODIVARANASI

  எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய நடவடிக்கைகளை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
   சிஏஏ சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
   தனது சொந்தத் தொகுதியான வாராணசிக்கு ஒரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்தார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
   எனது தலைமையிலான அரசு சில முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கு ஓர் அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அறக்கட்டளை அமைக்கப்பட்டு விட்டது. இனி, கோயில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெறும். அயோத்தியில் உள்ள 67 ஏக்கர் நிலத்தையும் அறக்கட்டளையிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
   ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை இந்த தேசத்தின் நலனுக்கு மிகவும் அவசியமானவை. இந்த முடிவுகளுக்காக இந்த தேசம் இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், மத்திய அரசு எடுத்த முடிவுகளில் உறுதியாக உள்ளது. அந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
   முன்னதாக, வாராணசியில் ரூ.1,254 கோடி மதிப்பீட்டில் 50 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்; சில திட்டங்களைத் தொடக்கியும் வைத்தார். அப்போது, வாராணசி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர் ஆகிய மூன்று புனிதத் தலங்களையும் இணைக்கும் "மகாகால் எக்ஸ்பிரஸ்' விரைவு ரயிலை அவர் காணொலி முறையில் தொடக்கி வைத்தார். இரவில் செல்லும் அந்த ரயில் தனியார் மூலம் இயக்கப்படவுள்ளது.
   அதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் நினைவகத்தையும், அவரது 63 அடி உயர உருவச் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், "தீனதயாள் உபாத்யாயவின் ஆத்மா நம்மை ஊக்குவித்து வருகிறது. அனைத்துச் சலுகைகளும் சமூகத்தில் கடைக்கோடியில் இருப்பவருக்கும் சென்றடைய வேண்டும் என்று தீனதயாள் உபாத்யாய விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம்' என்றார்.
   சிறப்பு மருத்துவமனை திறப்பு: தனது பயணத்தின் ஒரு பகுதியாக, 430 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு, மோடி பேசியதாவது:
   வாராணசியில் கடந்த சில ஆண்டுகளில் ரூ.25,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் பல திட்டங்கள் நிறைவடைந்து விட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நீர்வழித் தடங்கள், ரயில் போக்குவரத்துக்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பூர்வாஞ்சல் விரைவு வழிச்சாலை பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
   பாரம்பரிய, கலாசார தலங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில், ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை எட்டுவதில், சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றும் என்றார் மோடி.
   நூற்றாண்டு விழாவில் பங்கேற்பு: வாராணசி வந்தவுடன் ஸ்ரீ ஜகத்குரு விஸ்வாராத்ய குருகுலத்தின் நூற்றாண்டு விழாவில் மோடி கலந்து கொண்டார். அங்கு 19 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட "ஸ்ரீ சித்தாந்த சிகாமணி' நூலையும், அதற்கான செல்லிடப்பேசி செயலியையும் அவர் வெளியிட்டார்.
   இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
   ஒரு நாட்டின் வளர்ச்சி, அரசால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. அங்கு வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்தான் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. நமது நடத்தைகள், புதிய இந்தியா உருவாவதற்கு இட்டுச் செல்லும். நமது முன்னோர் காட்டிய பாதையைப் பின்பற்றி, நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தேசத்தைக் கட்டமைப்பதற்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
   கங்கை நதியைத் தூய்மையாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.7,000 கோடி மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.21,000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
   கங்கை நதியின் தூய்மையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. பொதுமக்களின் பங்களிப்பால்தான் இது சாத்தியமானது. இதேபோல், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஜல் ஜீவன் திட்டம் வெற்றி பெறவும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் மோடி.
   அதைத் தொடர்ந்து, பண்டிட் தீனதயாள் உபாத்யாய வர்த்தக மையத்தில் கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்த அவர், பொருள்களை வாங்க வந்தவர்களிடமும், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த கைவினைக் கலைஞர்களிடமும் கலந்துரையாடினார். இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai