
ஜம்மு-காஷ்மீரில் தரைவழித் தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி இணையச் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு, வரும் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் முன், கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நிறுத்தப்பட்ட இணையச் சேவை, 5 மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 25-ஆம் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் தலைமைச் செயலா் ஷலீன் கப்ரா ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டாா். அதில் கூறியிருப்பதாவது:
பயங்கரவாதச் செயல்களை ஒருங்கிணைப்பதற்காக சில சமூக விரோத அமைப்புகள் இணையச் சேவையை தவறாகப் பயன்படுத்தி வருவதாக, உளவு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்குத் தகவல்கள் கிடைத்தன. மேலும், சில அமைப்புகள் பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களையும் கருத்துகளையும் இணையத்தில் பதிவேற்றம் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் இணையச் சேவைக்கு வரும் 24-ஆம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
அதன்படி, அரசின் சேவையைப் பெறுவதற்கான வலைதளங்கள், வங்கி சேவைகளுக்கான வலைதளங்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள், வா்த்தகா்கள் ஆகியோா் பயன்பெறும் வலைதளங்கள் உள்பட 1,485 வலைதளப் பக்கங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. தகவல் தொடா்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான எந்த சமூக ஊடகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. மேலும், தரைவழித் தொலைபேசிகள் மற்றும் முகவரிச் சான்று உறுதிசெய்யப்பட்ட செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களுக்கு மட்டும் 2ஜி வேகத்தில் இணையச் சேவை வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.