ஷகீன் பாக் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற மத்தியஸ்தர்கள் நியமனம்: உச்ச நீதிமன்றம்

தில்லி ஷகீன் பாக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தக் குழுவை நியமித்துள்ளது.
ஷகீன் பாக் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற மத்தியஸ்தர்கள் நியமனம்: உச்ச நீதிமன்றம்


தில்லி ஷகீன் பாக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தக் குழுவை நியமித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தில்லி ஷகீன் பாக் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நாள்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தால் சாலைகள் தடைபட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே கௌல் மற்றும் கேஎம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (திங்கள்கிழமை) விசாரித்தது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "மக்கள் சாலைகளுக்கு வந்து போராடத் தொடங்கினால், என்ன ஆகும் என்பதுதான் இதன் பிரச்னை. கருத்துகளை வெளிப்படுத்துவதில்தான் ஜனநாயகம் செயல்படுகிறது. ஆனால், அதற்கென்று சில எல்லைகள் உண்டு. போராடுவதற்கான அடிப்படை உரிமை மக்களுக்கு உள்ளது. ஆனால், சாலைகளை மறிப்பதுதான் பிரச்னையாக இருக்கிறது. அதேசமயம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்டத்துக்கு எதிராக போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இல்லை என்றும் கூறவில்லை" என்றனர்.

மேலும், ஷகீன் பாக் போராட்டக்காரர்களுக்கு மாற்று இடத்தை வழங்கலாம் என்றும் தில்லி காவல் துறையினரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனிடையே, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "போராடுவதற்கு மாற்று இடம் கிடைக்காது என்பதன் காரணத்துக்காக போராட்டக்காரர்கள் தொடர்ந்து சாலைகளை மறிக்கக் கூடாது" என்றார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் போராட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே தலைமையில் வழக்கறிஞர் சாத்னா ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஹாஜாஹத் ஹபிபுல்லா ஆகியோர் அடங்கிய மத்தியஸ்தக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com