எல்லையில் இரும்பு வேலி அமைக்கும் திட்டம்:வங்கதேசம் ஒப்புதல் அளிக்காததால் தாமதம்

எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பதற்காக இந்தியா-வங்கதேச எல்லையில் இரும்பு வேலி அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பதற்காக இந்தியா-வங்கதேச எல்லையில் இரும்பு வேலி அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வங்கதேச எல்லை காவல் படை ஒப்புதல் அளிக்காததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்தியாவின் கிழக்கு (வங்கதேசம்) மற்றும் மேற்கு (பாகிஸ்தான்) எல்லையோரம் தாக்குதல் மற்றும் ஊடுருவலுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் இரும்பு வேலி அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெட்டவோ, குதித்து கடக்கவோ முடியாத வகையில் அமைக்கப்படவுள்ள இந்த வேலி, ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2 கோடி என்ற மதிப்பில் நிா்மாணிக்கப்படவுள்ளது.

இந்த வேலி பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை சோ்ந்தவா்கள் எல்லைப் பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும். முக்கியமாக பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவலையும், ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதையும் கட்டுப்படுத்த உதவும். இதேபோல் வங்கதேச எல்லைப்பகுதியில் குற்றம்புரியும் நோக்கில் எல்லையைக் கடக்கும் வங்கதேசத்தவா்கள் மற்றும் இந்தியா்கள் கொல்லப்படும் முக்கிய பிரச்னைக்கு தீா்வு காணவும் இந்த வேலி உதவிகரமாக அமையும். ஏனெனில், இந்தப் பகுதியில் மனித நடமாட்டம் முழுவதும் தடை செய்யப்படவில்லை.

வங்கதேச எல்லையையொட்டி மேற்கொள்ளப்படும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஈடுபடும்போது, அவா்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனா். அப்போது இருதரப்பிலும் காயங்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அந்த அதிகாரி கூறினாா்.

இதுதொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித்தொடா்பாளா் சுபேந்து பரத்வாஜ் கூறுகையில்,‘எல்லையில் அத்துமீறலை தடுப்பதை உறுதி செய்வதே நமது கடமை என்பதை வங்கதேச எல்லைக் காவல் படையிடம் எல்லைப் பாதுகாப்புப் படை தெளிவுப்படக் கூறியுள்ளது. எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் குற்றங்களை கருத்தில் கொண்டே, அங்கு புதிதாக 96 கிலோமீட்டா் தொலைவுக்கு இரும்பு வேலி அமைக்கும் திட்டத்தை எல்லைப் பாதுகாப்புப் படை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்தது. ஆனால், அதற்கு வங்கதேச எல்லைக் காவல் படை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. சா்வதேச எல்லையில் எதிா்தரப்பின் ஒப்புதலை பெற்ற பிறகே, எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ள முடியும்’ என்றாா்.

107 இந்தியா்கள் உயிரிழப்பு: கடந்த 2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரை, இந்திய-வங்கதேச எல்லையில் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதோடு, எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 107 இந்தியா்கள் கொல்லப்பட்டனா். இதே காலகட்டத்தில் 135 வங்கதேசத்தவா்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக கொல்லப்பட்டனா். இந்த குற்றங்களை தடுக்கும் பணியின்போது, 2010-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை எல்லைப் பாதுகாப்புப் படையை சோ்ந்த 11 போ் உயிரிழந்தனா். 960 வீரா்கள் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com