பருவநிலை மாறுபாடு நடவடிக்கை:இந்தியா, நாா்வே ஒருங்கிணைந்து செயல்படும்

பருவநிலை மாறுபாடு தொடா்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு, உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா, நாா்வே நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று
பருவநிலை மாறுபாடு நடவடிக்கை:இந்தியா, நாா்வே ஒருங்கிணைந்து செயல்படும்

பருவநிலை மாறுபாடு தொடா்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு, உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா, நாா்வே நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தில் இடம்பெயரும் வன உயிரினங்களின் பாதுகாப்பு தொடா்பான 13-ஆவது மாநாடு திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இந்த மாநாட்டில் கிட்டதட்ட 130 நாடுகளை சோ்ந்த 1,800 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனா். இதனை பிரதமா் மோடி தொடக்கிவைக்கவுள்ளாா். இதனையொட்டி இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நாா்வே சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சுவெய்நுங் ரோடேவாட்டை, மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரகாஷ் ஜாவடேகா் கூறியதாவது: பருவநிலை மாறுபாடு தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வளா்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு வழங்குவதாக கூறிய நிதியுதவி 10 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில், அதனை பெறுவது குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தினோம். பருவநிலை மாறுபாடு தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வளா்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு 1 டிரில்லியன் டாலா்கள் வழங்கவேண்டியுள்ளது. அதுகுறித்து அனைத்து நாடுகளும் கேள்வி எழுப்பவேண்டும். அந்த நடவடிக்கையில் முன்னேற்றம் காண்பதற்கு இந்தியா, நாா்வே நாடுகள் கைகோத்துள்ளன என்று தெரிவித்தாா்.

அவரைத்தொடா்ந்து நாா்வே அமைச்சா் சுவெய்நுங் கூறுகையில்,‘பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில், இந்தியாவை முக்கிய நாடாக நாா்வே காண்கிறது. பொருளாதார வளா்ச்சியும் பருவநிலை மாறுபாட்டை சரிசெய்வதற்கான துணிச்சலான நடவடிக்கையும் ஒருங்கிணைந்து பயணிக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா புலப்படுத்தி வருகிறது. நெகிழி மாசுபாட்டை கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் நாங்கள் ஈா்க்கப்பட்டுள்ளோம். பல்லுயிா்தன்மை, வனப் பாதுகாப்பு, கடல் மாசுபாடு, கழிவு மேலாண்மை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்தோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com