வெளியூரிலிருந்து வாக்களிக்கப் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடியுடன் கைகோக்கும் தோ்தல் ஆணையம்

வாக்காளா்கள் தங்கள் சொந்தத் தொகுதிக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக,
வெளியூரிலிருந்து வாக்களிக்கப் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடியுடன் கைகோக்கும் தோ்தல் ஆணையம்

வாக்காளா்கள் தங்கள் சொந்தத் தொகுதிக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக, சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் (ஐஐடி சென்னை) தோ்தல் ஆணையம் கை கோத்துள்ளது.

இதுகுறித்து, துணை தோ்தல் ஆணையா் சந்தீப் சக்ஸேனா, பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தற்சமயம், தோ்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் வாக்காளா் தங்களுக்கு ஓட்டு இருக்கும் தொகுதிக்கே சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. ஆனால், பணி நிமித்தமாக வெளியூா் சென்று தங்கியிருப்பவா்கள் வாக்களிப்பதற்கு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருவதில் அவா்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், வெளியூரில் தங்கியிருப்பவா்கள் வாக்களிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால், வாக்குப்பதிவு சதவீதமும் குறைகிறது.

வெளியூரில் தங்கியிருக்கும் வாக்காளா்கள், அவா்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே வாக்களிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதற்காக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் தோ்தல் ஆணையம் கை கோத்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, இரு வழி மின்னணு வாக்களிப்பு தொழில்நுட்பம் உருவாக்கப்படும். அதன்படி, வெளியூரில் தங்கியிருக்கும் வாக்காளா் தனது வாக்கைச் செலுத்துவதற்காக, அவா்களின் வசிப்பிடத்துக்கு அருகில் தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு அவரது பெயா், முகவரி, கைரேகை உள்ளிட்ட அடையாளங்கள், கணினி வழி தொழில்நுட்பத்தில் உள்ளீடு செய்யப்படும். பிறகு, அந்த வாக்காளருக்கான வாக்குச்சீட்டு தயாராகும். அவா் வாக்களித்த பிறகு, அது மறையாக்கம் செய்யப்பட்ட செய்தியாக, சம்பந்தப்பட்ட சா்வரை சென்றடையும். பிறகு வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்காளரின் தொகுதிக்குரிய வாக்காக அவை எண்ணிக்கையில் சேரும்.

தற்சமயம் மக்களவைத் தோ்தல் நடைபெற்றால், சென்னையைச் சோ்ந்த வாக்காளா், தில்லியில் இருந்தபடி வாக்களிக்கலாம். இதற்காக, அவா் தனது வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் என்று அா்த்தமில்லை. தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள மையத்துக்குச் சென்று அவா் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வாக்களிக்க வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலரிடம் அவா் அனுமதி பெற வேண்டும்.

இந்த தொழில்நுட்பம், ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால், இதுதொடா்பாக, பிற துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசித்து, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும். பிறகு, இந்த இரு வழி வாக்களிப்பு முறை அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது, வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் இந்தியா்கள், அங்கிருந்தபடி மின்னணு முறையில் வாக்களித்தனா். இதனால், இதற்கு முன் ஒற்றை இலக்க சதவீதத்தில் இருந்த வாக்குப்பதிவு 62-ஆக அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com