புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தவரின் மனைவி ராணுவத்தில் இணைகிறார்

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரின் மனைவி எடுத்திருக்கும் முடிவு பலருக்கும் முன்மாதிரியாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தவரின் மனைவி ராணுவத்தில் இணைகிறார்


டேஹ்ராடூன்: புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரரின் மனைவி எடுத்திருக்கும் முடிவு பலருக்கும் முன்மாதிரியாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தவுன்தியாலின் மனைவி 28 வயதான நிதிகா தவுன்தியால், இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார். அந்த முடிவு வெளியானதும், அவரும் ஒரு இந்திய ராணுவ வீரராக மாறுவார்.

இதுபற்றி நிதிகா கூறுகையில், எனது கணவர் விபூ, பலருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர். காதல், வாழ்க்கை, தைரியம், புத்திசாலித்தனம், பிறருக்கு உதவுதல் என பல வகைகளில் அவர் சிறப்பாகத் திகழ்தார். அவரை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இந்த முடிவை எடுத்தேன். எங்களது காதல் எப்போதும் மாறாது, அவரது தைரியம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் வாழும் வரை நிலைத்திருக்கச் செய்வேன் என்று கூறுகிறார்.

எனது இந்த முயற்சிக்கு விபூவின் தாய் சரோஜ் தவுன்தியாலும் ஆதரவாக இருக்கிறார். எனக்கு ஊக்கம் கொடுத்து, எனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குடும்பத்தின் தலைவரை, வாழ்க்கைத் துணையை இழப்பது அவ்வளவு ஒன்றும் எளிதான விஷயம் அல்ல, அவரது நினைவு இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட எங்களால் கடந்துவிட முடியாது, நாங்கள் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அவர் எங்களுடன் இருப்பது போன்றே உணர்கிறோம் என்றும் கூறுகிறார் நிதிகா.

விபூதி ஷங்கர் தவுன்தியால் - நிதிகா திருமணம் நடந்து வெறும் 10 மாதங்களே ஆன நிலையில்தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி ஷங்கர் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை தீா்ப்பளித்தது சிறப்பம்சமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com