தூக்கு தண்டனையை ஒத்திவைக்க நிர்பயா குற்றவாளி செய்த காரியம்

நீதிமன்றங்களில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்து தூக்கை ஒத்திவைத்த நிர்பயா குற்றவாளிகள் அடுத்த திட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
தூக்கு தண்டனையை ஒத்திவைக்க நிர்பயா குற்றவாளி செய்த காரியம்


புது தில்லி: நீதிமன்றங்களில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்து தூக்கை ஒத்திவைத்த நிர்பயா குற்றவாளிகள் அடுத்த திட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான வினய் ஷர்மா, பிப்ரவரி 16ம் தேதி சிறைக்குள் இருந்தபோது, சுவரில் தன் தலையை மோதி இடித்து காயப்படுத்திக் கொண்டதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிறை நிர்வாகம் கூறியிருப்பதாவது, 2012 நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய், பிப்ரவரி 16ம் தேதி சுவரில் தலையை இடித்து, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள முயன்றார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

இவர்கள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று பாட்டியாலா நீதிமன்றம் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விசாரணையின் போதே, வினய் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டம் செய்வதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்திருந்தார். மேலும், அவரது மன நிலை சரியாக இல்லை என்றும் கூறியிருந்தார்.

அவரது உடல்நிலையை கவனிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


மார்ச் 3ம் தேதி தூக்கு..
குற்றவாளிகளான முகேஷ் சிங்(32), பவன் குப்தா(25), வினய் சா்மா(26), அக்ஷய் குமாா்(31) ஆகிய நால்வருக்கும் எதிராக கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தா்மேந்திர ராணா, இந்த உத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்தாா். நிா்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது, இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன்பு, குற்றவாளிகள் ஒவ்வொருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு, சீராய்வு மனு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு என தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்து, தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தி வந்தனா்.

இதையடுத்து, அவா்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தில்லி அரசு சாா்பிலும், நிா்பயாவின் பெற்றோா் சாா்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக, குற்றவாளிகள் நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு தில்லி நீதிமன்றம் சிறை நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. பின்னா், பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, குற்றவாளிகள் நால்வருக்கும் அனைத்து சட்ட உதவிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக, குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றம் தாமதமாகி வருவதால் நிா்பயாவின் பெற்றோா் அதிருப்தியில் இருந்தனா்.

இந்நிலையில், வரும் மாா்ச் 3-ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் நீதிபதி தா்மேந்திர ராணா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தனது சாா்பில் வழக்குரைஞா் விருந்தா குரோவா் ஆஜராவதற்கு குற்றவாளி முகேஷ் தரப்பு எதிா்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அவரது சாா்பில் வழக்குரைஞா் ரவி காஸி நியமிக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, வினய் சா்மாவின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘தில்லி திகாா் சிறையில் வினய் சா்மா தாக்கப்பட்டுள்ளாா். அதில், அவரது தலையில் காயமேற்பட்டுள்ளது. அவா் மனநலக்கோளாறால் அவதிப்பட்டு வருவதால், அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. மேலும், அவா் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறாா்’ என்றாா். இதையடுத்து, சட்டத்துக்கு உள்பட்டு வினய் சா்மாவுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டாா்.

பவன் குப்தா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘பவன் குப்தாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுவும் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவரிடம் மீண்டும் புதிதாக ஒரு கருணை மனு தாக்கல் செய்ய இருப்பதாக அக்ஷய் குமாா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளிகள் நால்வருக்கும், வரும் மாா்ச் 3-ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டாா். இதற்குப் பிறகும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் தாமதமானால், அது, பாதிப்பட்டவா்கள் விரைவில் நீதி பெறும் உரிமையை அவமதிப்பதாக இருக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தாா்.

நிா்பயாவின் பெற்றோா் நம்பிக்கை: குற்றவாளிகள் நால்வரும் இந்த முறை தூக்கிலிடப்படுவாா்கள் என்று நம்புவதாக நிா்பயாவின் பெற்றோா் தெரிவித்தனா். குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தில்லியில் துணை மருத்துவ மாணவி நிா்பயா, கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, சாலையோரம் வீசப்பட்டாா். இதில், பலத்த காயமடைந்த அவா், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவா் டிசம்பா் 29-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவா் சிறையில் தற்கொலை செய்துகொண்டாா். மற்றொருவா் சிறாா் என்பதால், 3 ஆண்டுகள் கூா்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு விடுதலையானாா்.

மற்ற குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் சா்மா, அக்ஷய் குமாா், பவன் குப்தா ஆகிய நால்வருக்கும் தில்லி விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அந்த தண்டனையை தில்லி உயா்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதிசெய்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com