லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதி 33 வயது முஸ்லிம் இளைஞர்

வடக்கு கர்நாடகத்திலுள்ள லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக ஒரு முஸ்லிம் இளைஞர் தலைமையேற்று வழி நடத்த உள்ளார்.
லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதி 33 வயது முஸ்லிம் இளைஞர்


ஹப்பள்ளி: வடக்கு கர்நாடகத்திலுள்ள லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக ஒரு முஸ்லிம் இளைஞர் தலைமையேற்று வழிநடத்த உள்ளார்.

12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பசவண்ணரின் கொள்கைகள் மற்றும் உபதேசங்களைத் தன் சிறு வயது முதல் கேட்டு, அதன்படி வாழ்ந்து வரும் திவான் ஷரீஃப் ரஹிமான்சாப் முல்லா (33) என்ற முஸ்லிம் இளைஞர், வரும் புதன்கிழமை லிங்காயத்து மடத்தின் மடாதிபதியாக மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

கலாபுராகியில் உள்ள கஜ்ஜுரி கிராமத்தில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த் கோரனேஷ்வர சாந்திதம மடத்துடன் இணைந்துள்ள அசுதி கிராமத்தில் இயங்கி வரும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சாந்திதமா மடத்தின் மடாதிபதியாக நியமிக்கப்படுகிறார் முஸ்லிம் இளைஞர் ஷரீஃப்.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் மிகப்பெரிய மடமாக இந்த லிங்காயத்து மடம் விளங்குகிறது.

பசவண்ணரின் தத்துவங்கள் உலகளவில் புகழ்பெற்றவை. எங்கள் லிங்காயத்  சமூகத்தில் எந்த ஜாதி மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்களும் இணையலாம். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஞானி பசவண்ணர், சமூக நீதி மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்டார். ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் போதனைகளைக் கற்பித்தார். அவரது போதனைகளைப் பின்பற்றியே இந்த மடம் திறக்கப்பட்டது. இங்கு எந்த மதத்தினரும் வரலாம். அனைவருக்காகவும் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கஜ்ஜுரி மடத்தின் மடாதிபதியாக இருக்கும் முருகராஜேந்திர கோரனேஷ்வர சிவயோகி கூறுகிறார்.

சிவயோகியின் உபதேசங்களின்பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப்பின் தந்தை மறைந்த ரஹிமான்சாப் முல்லா, அசுதி மடத்துக்காக இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

பசவண்ணாவின் தத்துவங்கள் பால் ஈர்க்கப்பட்ட ஷரீஃப், அதனைப் பின்பற்றியே வாழ்ந்து வருகிறார். அவரது தந்தையும் லிங்காயத்து வழிமுறைகளைப் பின்பற்றி நம்மிடம் லிங்க தீட்சையும் பெற்றுள்ளார். ஷரீஃப் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர்  10ம் தேதி தீட்சை பெற்றார். அவருக்கு லிங்காயத்து மதத்தின் அடிப்படையான முக்கிய விஷயங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன என்றும் சிவயோகி கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, லிங்காயத்தின் மடாதிபதியாக ஒரு குடும்பஸ்தரை நியமிப்பது இதுவரை நடைபெறாத ஒரு வழக்கமாகவும் உள்ளது. ஷரீஃப் திருமணமாகி, ஒரு மகன் மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையாவார். லிங்காயத்தின் மத நம்பிக்கையில், ஒருவர் குடும்பத்தை வழிநடத்தியும் நற்கதி அடையலாம் என்பதை வலியுறுத்துகிறது. அதுபோலவே ஒரு குடும்பஸ்தரும், சமூக மற்றும் ஆன்மிகப் பணிகளில் ஈடுபடலாம் என்று சிவயோகி கூறுகிறார்.

ஷரீஃப் மடாதிபதியாவதற்கு, மடத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் தொண்டர்களும் ஆதரவாக உள்ளனர். இதன் மூலம், பசவண்ணரின் தத்துவங்களை அடிப்படையாக வைத்து மாநிலத்தின் நன்மைக்கும் உறுதுணையாக இருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்கிறார்கள் பக்தர்கள்.

மேனாசகி கிராமத்தில் மாவு மில் நடத்தி வந்த ஷரீஃப், கிடைக்கும் நேரத்தில் எல்லாம், பசவண்ணர் மற்றும் 12ம் நூற்றாண்டில் உருவான மகான்களின் உபதேசங்களைப் படித்தும், பிறருக்குக் கற்பித்தும் வந்தார். 

எனது மிகச் சிறிய சேவையை அங்கீகரித்து மடாதிபதி முருகராஜேந்திர சுவாமிஜி, என்னைத் தனது குடையின் கீழ் ஏற்றுக் கொண்டார். நானும் பசவண்ணர் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன் என்று கூறுகிறார் ஷரீஃப்.

இந்த மடத்தின் நிர்வாகிகள் கூறுகையில், இந்த மடம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் இந்த மண்ணில் வன்முறை நடப்பதை நாங்கள் வெறுக்கிறோம். இங்கும் யார் மடாதிபதியாகப் போகிறார்கள் என்பதில் ஒரு பேச்சு எழுந்தது. ஆனால், பசவண்ணரின் வழியில் நடந்து முன்மாதிரியாக விளங்குவோரைச் சரியாக தேர்வு செய்து மடாதிபதி பொறுப்புக்கு நியமித்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.

மதம் மற்றும் ஜாதியை மறந்து, இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவருமே, இந்த மடத்தின் பக்தர்களாக இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஷரீஃப்பின் பின்னால் நிற்கிறோம் என்றும் நிர்வாகிகள் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com