அனைத்து வாகனங்களையும் மின்சாரத்துக்கு மாற்றும் திட்டம்: அமைச்சருடன் கலந்துரையாட உச்சநீதிமன்றம் விருப்பம்

அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களையும், அரசு வாகனங்களையும் படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம் குறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரியுடன் கலந்துரையாடுவதற்கு
அனைத்து வாகனங்களையும் மின்சாரத்துக்கு மாற்றும் திட்டம்: அமைச்சருடன் கலந்துரையாட உச்சநீதிமன்றம் விருப்பம்

அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களையும், அரசு வாகனங்களையும் படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம் குறித்து மத்திய அமைச்சா் நிதின் கட்கரியுடன் கலந்துரையாடுவதற்கு உச்சநீதிமன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது.

காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்கு, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றும் அரசின் முடிவை அமல்படுத்தக் கோரி, ‘சிபிஐஎல்’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பொது போக்குவரத்து வாகனங்களையும், அரசு வாகனங்களையும் மின்சாரத்துக்கு மாற்றும் திட்டத்தை மத்திய அரசு எப்படி நடைமுறைப்படுத்தப்போகிறது? இதுகுறித்து, மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளித்தால் சரியாக இருக்கும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

அதற்கு, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.என்.எஸ்.நத்கா்னி ஆட்சேபம் தெரிவித்தாா். ‘நீதிமன்றத்துக்கு அமைச்சரை அழைப்பதில் தவறேதுமில்லை. ஆனால், அவா் நீதிமன்றத்துக்கு வருவது அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படலாம்’ என்று நத்கா்னி வாதிட்டாா்.

அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமைச்சா் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. இருப்பினும், அனைத்துப் பிரச்னைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவா்களின் உதவியைப் பெறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறோம்’ என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை 4 வாரங்கள் கழித்து நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com