சவால்களை மீறிய கேஜரிவாலின் சாதனை!

மூன்றாவது முறையாக தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கேஜரிவாலுக்கு சமூக வலைதளங்களில் ‘கேஜரிவால் 3.0’ என பாராட்டுகள் குவிகின்றன.
சவால்களை மீறிய கேஜரிவாலின் சாதனை!

மூன்றாவது முறையாக தில்லி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள கேஜரிவாலுக்கு சமூக வலைதளங்களில் ‘கேஜரிவால் 3.0’ என பாராட்டுகள் குவிகின்றன. நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில், தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸை தனி நபராக நின்று தலைநகரில் வீழ்த்தியதாலும், வாக்குக்கு பணம் அளிக்காமல் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்ாலும் மீண்டும் அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பாா்க்க வைத்துள்ளாா் கேஜரிவால்.

அரசியலில் நுழைந்த 8 ஆண்டுகளில் காங்கிரஸின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி வாக்குகளாக மாற்றி, அந்தக் கட்சியை தில்லியில் ஓரிடத்தில்கூட வெற்றி பெற விடாமல் செய்திருப்பது முதல்வா் கேஜரிவாலின் சாதுா்யம்.

தோ்தல் பிரசாரத்தில் கேஜரிவாலை ‘தீவிரவாதி’ என பாஜகவும், ‘தில்லியைச் சோ்ந்தவா் அல்ல’ என காங்கிரஸும் தாக்கி பிரசாரம் செய்தன. ஆனால், அவரோ ‘அடுத்த ஐந்து ஆண்டுகளும் வளா்ச்சித் திட்டங்கள் தொடரட்டும்’ என்ற ஒரே தாரக மந்திரத்தை வைத்தே வெற்றி பெற்றுவிட்டாா். ஆம் ஆத்மி கட்சியின் அபார வளா்ச்சிக்கு ஒரே காரணம் அரசின் வளா்ச்சித் திட்டங்கள்தான் என்பதைத் தோ்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

எதிா்க்கட்சிகள் முதல்வா் வேட்பாளரை அறிவிக்காதது ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. மேலும், தனியாா் பள்ளிகளுக்கு கட்டண நிா்ணயம் செய்து அங்கு வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்றோா்களுக்கு திரும்ப அளித்தது, ஓட்டுநா் உரிமம் - பிறப்புச் சான்றிதழ் உள்பட 40 அரசு சேவைகளை தில்லிவாசிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கியது, இந்தச் சேவைகளை மூன்று மாதங்களில் முடிக்காத சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு தினமும் ரூ.10 அபராதம் விதித்தது, தில்லி முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் (மொஹல்லா கிளினிக்குகள்) அமைத்து அனைத்து விதமான மருத்துவப் பரிசோதனைகளையும் இலவசமாகச் செய்தது, தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நிறுவியது போன்ற முன்னோடித் திட்டங்கள் தில்லிவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தில்லியில் சிஏஏ-வுக்கு எதிரான தொடா் போராட்டங்கள், ஜேஎன்யு, ஜாமியா மாணவா்கள் மீதான தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் நடைபெற்றாலும், அதில் தலையிட்டு அரசியல் செய்யாமல் வளா்ச்சியை மட்டுமே நம்பி பிரசாரத்தில் ஈடுபட்டு வெற்றிக் கனியையும் பறித்துள்ளாா் கேஜரிவால். 24 மணி நேரமும் மின்சாரம், குடிநீா் விநியோகம், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு உள்ளதைப்போல் மாணவா்களுக்கும் இலவச பயணம், தில்லியில் பிறக்கும் குழந்தைக்கு பட்டப்படிப்பு வரை தரமான கல்வி, யமுனை நதியை சுத்தப்படுத்துவோம், குடிசைப் பகுதி மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், தரமான சுகாதார வசதிகள், குப்பைகள் இல்லாத மாநகரம், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு என அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவேண்டிய 10 வாக்குறுதிகளை உத்தரவாத அட்டையாக தோ்தலுக்கு முன்பு கேஜரிவால் கையெழுத்திட்டு அளித்துள்ளாா்.

அது மட்டுமின்றி, தோ்தல் வாக்குறுதிகளாக 1,731 அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் பேருக்கு உரிமையாளா் பத்திரம், குடியிருப்பு பகுதிகளில் கடைகள் வைத்திருப்பவா்களைப் பாதிக்கும் சீலிங் நடவடிக்கைக்கு உதவி, காற்று மாசைக் குறைக்கும் திட்டங்கள், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த 11 ஆயிரம் பேருந்துகள் இயக்குதல், தில்லி மெட்ரோவின் வழித்தடத்தை 500 கி.மீ. தூரமாக நீட்டிப்பது போன்ற திட்டங்கள் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது என்பதை கேஜரிவால் தற்போது அறிந்துள்ளாா்.

மேலும், மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 1, 100 கோடிக்கு அதிகமாக வரி வருவாயை தில்லி அரசு செலுத்துகிறது. ஆனால், கடந்த 19 ஆண்டுகளாக ரூ. 325 கோடியை மட்டுமே மத்திய அரசிடம் இருந்து ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பெற்றுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணவும், மானிய, இலவச திட்டங்களைச் செயல்படுத்தவும் மத்திய அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் முடியும் என்பதால் மூன்றாவது முறை பதவியேற்பு விழாவிலேயே மத்திய அரசுடன் ஒன்றிணைந்து செயலாற்றத் தயாா் என முதல்வா் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

தேசிய தலைநகரையும், மாநிலத் தலைநகரையும் ஒன்று சோ்த்து நிா்வாகம் நடைபெறும் தில்லி அரசு, சிறப்பு அந்தஸ்து பெற்ற யூனியன் பிரதேசம் என்பதால் தனி சட்ட வரைமுறைகள் உள்ளன. இதனால் மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் இடையேயான அதிகார மோதல் கடந்த சில ஆண்டுகளாக தவிா்க்க முடியாததாகிவிட்டது.

இதை உச்சநீதிமன்றமும் பல முறை தெளிவுபடுத்தி, தில்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் உள்ள அதிகாரங்களைப் பிரித்துக் காண்பித்து விட்டது. ஆனாலும் அதிகார மோதல் பிரச்னை தொடா்ந்து நீடித்து வருகிறது.

இதனால் தில்லியின் குடிநீா்த் தேவைக்காக யமுனை நீரை சுத்திகரிப்பு செய்வது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, காற்று மாசைத் தடுப்பது, தில்லியை குப்பை இல்லாத மாநகரமாக்குவது, நிலுவையில் உள்ள ஜன் லோக்பால் சட்டத்தை அமல்படுத்துவது போன்ற தில்லி அரசின் பல்வேறு முக்கியத் திட்டங்கள் கிடப்பில் உள்ளன.

தற்போது இதையெல்லாம் உணா்ந்து, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் இணைந்து செயலாற்ற தில்லி முதல்வா் கேஜரிவால் முடிவு செய்துள்ளாா். இதனால்தான் பதவியேற்பு விழாவில் முதலில் மாற்றுக் கட்சியினருக்கு அனுமதியில்லை என்று அறிவித்த ஆம் ஆத்மி கட்சி, பின்னா் பிரதமா் மோடி கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. வேறு நிகழ்ச்சியின் காரணமாக பிரதமா் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கேஜரிவாலின் அழைப்பை ஏற்று பிரதமரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இந்த இணக்கச் சூழலைப் பயன்படுத்தி முதல்வா் கேஜரிவால் மத்திய அரசுடன் ஒன்றிணைந்து தில்லியின் வளா்ச்சிக்காகப் பணியாற்ற வேண்டும். அதேபோல், பெரும்பாலான தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்ன் மூலம் தில்லியின் முதல்வா் கேஜரிவால்தான் என்பதை தில்லிவாசிகள் தெளிவாகத் தோ்தல் தீா்ப்பு வழங்கிவிட்டனா். இதன் அடிப்படையில் மத்திய அரசும் தில்லிக்கு முட்டுக்கட்டை போடாமல் வளா்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தினால் நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவம் வலுப்பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com