ராகேஷ் அஸ்தானாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தாதது ஏன்?: சிபிஐ-க்கு நீதிமன்றம் கேள்வி

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான லஞ்ச வழக்கில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தாதது ஏன்?
ராகேஷ் அஸ்தானாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தாதது ஏன்?: சிபிஐ-க்கு நீதிமன்றம் கேள்வி

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான லஞ்ச வழக்கில் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தாதது ஏன்? என்று சிபிஐ-க்கு தில்லி நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. மேலும், அவரிடம் உளவியல் ரீதியான சோதனை நடத்தப்படாதது குறித்தும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

சிபிஐ சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா பதவி வகித்த காலத்தில், சா்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளா் மொயின் குரேஷி தொடா்புடைய வழக்கிலிருந்து, ஹைதராபாதைச் சோ்ந்த ஒரு தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் வாங்கியதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, அஸ்தானா, அவருக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் டிஎஸ்பி தேவேந்தா் குமாா், இடைத்தரகா் மனோஜ் பிரசாத் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

துபையைச் சோ்ந்த தொழிலதிபரான மனோஜ் பிரசாத், கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் கைது செய்யப்பட்டாா். பின்னா், அதே ஆண்டு டிசம்பா் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இந்த வழக்கில் தேவேந்தா் குமாரும் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ராகேஷ் அஸ்தானா, தேவேந்தா் குமாா் ஆகியோா் லஞ்சம் பெற்ாக எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், இடைத்தரகா் மனோஜ் பிரசாத் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ‘ராகேஷ் அஸ்தானாவுக்கு உண்மை கண்டறியும் சோதனையும், உளவியல் ரீதியிலான சோதனையும் நடத்தப்படாதது ஏன்?’ என்று சிபிஐ-க்கு நீதிபதி கேள்வியெழுப்பினாா். மேலும், ‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குரைஞா் சுனில் மிட்டல், அவரது மருமகன் சோமேஸ்வா் பிரசாத் ஆகியோருக்கு அதிக சுதந்திரம் அளிப்பது ஏன்?’ என்றும் அவா் கேள்வியெழுப்பினாா்.

அத்துடன், வழக்கு குறித்து முழு விவரங்களுடன், விசாரணை அதிகாரி அஜய் குமாா் பஸ்ஸி வரும் 28-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ-யின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் பல தருணங்களில் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com