சோன்பத்ராவில் 3,000 டன் அளவிலான தங்க படிமம் எதையும் கண்டுபிடிக்கவில்லை: இந்திய புவியியல் ஆய்வு மையம்

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் 3,500 டன்னுக்கு மேலான தங்க படிமம் எதையும் கண்டுபிடிக்கவில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் 3,500 டன்னுக்கு மேலான தங்க படிமம் எதையும் கண்டுபிடிக்கவில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவின் சோன் பகாதி, ஹார்தி ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுரங்கத் துறை அலுவலர் கே.கே. ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆனால், இப்படி எந்தவொரு தங்க படிமத்தையும் கண்டுபிடிக்கவில்லை என இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) சனிக்கிழமை மறுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய புவியியல் ஆய்வு மைய பொது இயக்குநர் எம் ஸ்ரீதர் கொல்கத்தாவில் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில்,

"இதுபோன்ற தரவுகள் எதுவும் ஜிஎஸ்ஐ தரப்பில் இருந்து யாரிடமும் வழங்கப்படவில்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் இதுபோன்ற வளமிக்க தங்க படிமம் எதையும் ஜிஎஸ்ஐ கணக்கிடவில்லை. தாதுக்கள் தொடர்பான எந்தவொரு எங்களது கண்டுபிடிப்புகளையும் மாநிலப் பிரிவுகளுடன் ஆய்வு நடத்திய பிறகே அதைப் பகிர்வோம். அந்தப் பகுதியில் 1998-99 மற்றும் 1999-2000 ஆகிய காலகட்டத்தில் நாங்கள் (ஜிஎஸ்ஐ, வடக்குப் பிராந்தியம்) பணிகளை மேற்கொண்டோம். இதுதொடர்பான அறிக்கையை தகவலுக்காகவும், அடுத்தகட்ட தேவையான நடவடிக்கைக்காவும் உத்தரப் பிரதேச புவியியல் மற்றும் சுரங்கத் துறையிடம் (டிஜிஎம்) பகிர்ந்தோம்.

தங்கத்துக்கான ஜிஎஸ்ஐ-யின் ஆய்வுப் பணிகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. அதன் முடிவுகளும் ஊக்கமளிக்கும் வகையில் இல்லை.

52, 806.25 டன் தாது வளங்களை ஜிஎஸ்ஐ கணக்கிட்டுள்ளது. மொத்த வளமான 52,806.25 டன் தாதுக்களில் இருந்து ஏறத்தாழ 160 கிலோ தங்கத்தைதான் பிரித்தெடுக்க முடியும். ஊடகங்களில் குறிப்பிட்டதன்படி 3,350 டன் தங்கத்தை பிரித்தெடுக்க முடியாது" என்று தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, சுரங்கத் துறை அலுவலர் கே.கே.ராய் இதுகுறித்து கூறியதாவது:

சோன்பத்ராவின் சோன் பகாதி, ஹார்தி ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் பெரிய அளவிலான தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிக்குப் பிறகு இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கான சுரங்கம் தோண்டும் பணிகள் மின்னணு ஏல முறையில் நடைபெறும். சோன் பகாதியில் சுமார் 2,943.26 டன் தங்க படிமமும், ஹார்தியில் 646.16 டன் தங்க படிமமும் உள்ளன. தங்கம் தவிர வேறு சில தாதுப் படிமங்களும் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com