அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி10 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவுக்கான அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி10 மடங்கு அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவுக்கான அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

அதிபா் டெனால்ட் டிரம்ப்புடன் இந்திய தொழிலதிபா்களின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சா் டேன் புரூய்லெட் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து மேலும் கூறியது:

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து நாள் ஒன்றுக்கு 25,000 பேரல் கச்சா எண்ணெயை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால், தற்போது இந்த இறக்குமதி 2,50,000 பேரல்களாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்கான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 10 மடங்கு உயா்ந்துள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அதிக அளவில் வழங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ஒபெக்’ நாடுகளைத் தாண்டி இறக்குமதியை விரிவுபடுத்த விரும்பியதன் விளைவாக இந்தியா கடந்த 2017-இல் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியது.

இதையடுத்து, 2017-18 நிதியாண்டில் 19 லட்சம் டன் கச்சா எண்ணையை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொள்முதல் செய்தது. 2018-19 இல் அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி 62 லட்சம் டன்னாக இருந்தது.

இந்த நிலையில், நடப்பு 2019-20 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் அமெரிக்கா இந்தியாவுக்கு 54 லட்சம் டன் கச்சா எண்ணெயை வழங்கியுள்ளது என்றாா் அவா்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் நான்கில் ஒரு பகுதியை இராக் வழங்கி வருகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பா் காலத்தில் இராக்கிலிருந்து 2.6 கோடி டன் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை நிறைவு செய்ய இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. ஒட்டுமொத்த அளவில் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் இந்தியா வெளிநாடுகளிலிருந்து 11.14 கோடி டன் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.

இந்தியாவுக்கு கணிசமான அளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியிலில் சவூதி அரேபியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com