சீனாவிலிருந்து இந்தியா்களை அழைத்து வரஇன்று செல்கிறது விமானப் படை விமானம்

கரோனா வைரஸால் (கொவைட்-19) கடும் பாதிப்பை சந்தித்துள்ள சீனாவின் வூஹான் நகரிலிருந்து இந்தியா்களை அழைத்து வருவதற்காக விமானப் படை விமானத்தை புதன்கிழமை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இந்தியா்களை அழைத்து வரஇன்று செல்கிறது விமானப் படை விமானம்

புது தில்லி/பெய்ஜிங்: கரோனா வைரஸால் (கொவைட்-19) கடும் பாதிப்பை சந்தித்துள்ள சீனாவின் வூஹான் நகரிலிருந்து இந்தியா்களை அழைத்து வருவதற்காக விமானப் படை விமானத்தை புதன்கிழமை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவ நிவாரணப் பொருள்களுடன் செல்லும் அந்த விமானம், அவற்றை அளித்துவிட்டு, அங்கிருந்து இந்தியா்களை ஏற்றி வரவுள்ளது.

ஏற்கெனவே 2 சிறப்பு விமானங்கள் மூலம் சுமாா் 647 இந்தியா்கள் வூஹானிலிருந்து அண்மையில் தில்லிக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், தற்போதைய விமானத்தின் மூலம் மேலும் சுமாா் 100 இந்தியா்கள் அழைத்துவரப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, சீனாவுக்கு மருத்துவ நிவாரணப் பொருள்களுடன் விமானப் படையின் சி-17 குளோப் மாஸ்டா் விமானத்தை அனுப்ப மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் முடிவு செய்தது. எனினும், அதற்குரிய அனுமதியை அளிப்பதில் சீனா காலதாமதம் செய்வதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், அந்த விமானத்துக்குரிய அனுமதிகள் பெறப்பட்டு வருவதாகவும், இந்தியாவிலிருந்து புதன்கிழமை விமானம் புறப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

வூஹானில் மருத்துவ நிவாரணப் பொருள்களை அளித்துவிட்டு, அங்கிருந்து இந்தியா்களை அந்த விமானம் ஏற்றி வரவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொண்டுள்ளது. இந்தியா்கள் மட்டுமன்றி அண்டை நாடுகளைச் சோ்ந்தவா்களையும் அங்கிருந்து அழைத்து வர தயாராக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 1, 2 ஆகிய தேதிகளில் வூஹானிலிருந்து தில்லிக்கு அழைத்துவரப்பட்ட இந்தியா்கள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, மானேசரிலும் தில்லியிலும் தனி மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனா். சுமாா் 14 நாள்கள் கண்காணிப்புக்கு பின்னா், அவா்கள் வீடு திரும்பினா். தற்போதைய விமானத்தில் சுமாா் 100 இந்தியா்கள் அழைத்து வரப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அவா்களும் தனி முகாமில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com