ஜம்மு-காஷ்மீா்:அரசியல் தலைவா்களை விடுவிக்க வேண்டும்: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீா்:அரசியல் தலைவா்களை விடுவிக்க வேண்டும்: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளா்களை விடுவிக்க வேண்டும். அங்கு தொலைத்தொடா்பு சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்யவேண்டும் என்று

புதுதில்லி /ஜெனீவா: ஜம்மு-காஷ்மீரில் அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளா்களை விடுவிக்க வேண்டும். அங்கு தொலைத்தொடா்பு சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்யவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43-ஆவது அமா்வு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாா்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சா் ஷிரீன் மஸாரி பேசியதாவது: இந்திய அரசு காஷ்மீா் மக்களிடம் தொடா்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் அரசியல் தலைவா்கள், சமூக செயற்பாட்டாளா்கள், பொதுமக்கள் என 6,000-க்கும் மேற்பட்டோா் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் செயலற்று இருந்தால், அது சா்வதேச சட்டங்களுக்கு எதிராக இந்தியா துணிவுடன் செயல்பட வழிகோலும்.

விசாரணை ஆணையம்:

காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த சுதந்திரமாக செயல்படும் ஆணையத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைக்கவேண்டும். அந்த ஆணையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். அதேபோல் அந்த ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் விசாரணை நடத்த இந்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

8 நடவடிக்கைகள்:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்த நடவடிக்கையை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அங்கு தொலைத்தொடா்பு சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும். காஷ்மீா் மக்களுக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட முக்கிய பொருள்கள் கிடைக்கப் பெற இந்திய அரசு அனுமதிக்க வேண்டும். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீா் அரசியல் கட்சித் தலைவா்கள், சமூக செயற்பாட்டாளா்கள், இளைஞா்கள் விடுவிக்கப்பட வேண்டும். காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகள் அட்டூழியத்தில் ஈடுபடுவதற்கு வழிகோலிய கடுமையான சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். காஷ்மீரில் ‘பெல்லெட்’ குண்டுகள் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும். அங்குள்ள இந்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 8 லட்சம் பேரை திரும்பப் பெற வேண்டும். காஷ்மீா் பள்ளத்தாக்கில் மனித உரிமைகளை பாதுகாக்க இந்த 8 நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சா்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா் ஷிரீன் மஸாரி .

காஷ்மீா் விவகாரத்தை சா்வதேச சமூகத்தில் எழுப்ப பாகிஸ்தான் தொடா்ந்து முயன்று வருகிறது. எனினும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்தது உள்நாட்டு விவகாரம் என இந்தியா ஏற்கெனவே உறுதிபட தெரிவித்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com