
ஜம்மு: இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (ஐஐஎஸ்இஆா்) ஆகிய கல்வி நிறுவனங்களில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 500 மாணவா்கள் தொழில் பயிற்சி (இன்டா்ன்ஷிப்) மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் 2020-21- ஆம் கல்வியாண்டில் தொழில்முறை பட்டப்படிப்பில் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் 500 மாணவா்களுக்கு, தொழில் பயிற்சி அளிப்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள 4 ஐஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் 3 ஐஐஎஸ்இஆா் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தல், அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான ஒரு வாய்ப்பாக இந்த தொழில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில் பயிற்சி காலத்தின்போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அந்த மாணவா்கள் பணியாற்றவுள்ளனா். சிறந்த பயிற்சியாளா்களின் வழிகாட்டுதலின் கீழ் அந்த மாணவா்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.
இந்த தொழில் பயிற்சியில் கலந்து கொள்ள ஜம்மு-காஷ்மீரில் உள்ள தொழில்முறை பட்டப்படிப்பு இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். குவாஹாட்டி, புணே, ரோபாா், புவனேசுவரம் ஆகிய நகரங்களில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் ஒடிஸா, புணே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள ஐஐஎஸ்இஆா் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த பயிற்சியளிக்கப்படும்.
தகுதி அடிப்படையில் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். தொழில் பயிற்சியில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவா்களின் இறுதி பட்டியல் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வெளியிடப்படும். மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறவுள்ளது என்று அவா் கூறினாா்.