தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு

பிரபல தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு

பிரபல தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஐபேக்  நிறுவனத்தின் தலைவரும், பிரபல தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் ஆந்திரத்தின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றி, ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற உதவினார். இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் திமுகவுடன் கைகோர்த்துள்ளார். 

இதனிடையே பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசாந்த் கிஷோர் அக்கட்சியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டார். கட்சியின் முடிவுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் எதிராக நடந்து கொண்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக ஐக்கிய ஜனதா தளம் அறிக்கை வெளியிட்டது. 

இதையடுத்து பிகாருக்கு ஒரு நல்ல தலைவர் தேவை, இளம் தலைமுறையினரை இணைத்து பிகாரை சிறந்த மாநிலங்களில் ஒன்றாக உருவாக்குவேன் என்று கூறியதுடன் 'பாத் பீகார் கி' என்ற திட்டத்தை அறிவித்தார் பிரசாந்த் கிஷோர்.

இதன் தொடர்ச்சியாக, தனது திட்டத்தை திருடியதாக ஷாஷ்வத் கவுதம் என்பவர் பாட்னாவின் பாடலிபுத்ரா காவல் நிலையத்தில் பிரசாந்த் கிஷோர் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், பிரசாந்த் கிஷோர் மீது ஐபிசி 420, 406 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கவுதமிடம் இருந்து 'பாத் பீகார் கி' திட்டம் திருடப்பட்டதை ஒசாமா என்பவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக பாட்னா காவல்துறையினர் தற்போது  விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com