வூஹானில் இருந்து 76 இந்தியர்கள், 36 வெளிநாட்டினர் மீட்பு

சீனாவின் வூஹான் நகரில் இருந்து 76 இந்தியர்களும், 36 வெளிநாட்டினரும் இந்திய விமானப் படை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். 
வூஹானில் இருந்து 76 இந்தியர்கள், 36 வெளிநாட்டினர் மீட்பு


சீனாவின் வூஹான் நகரில் இருந்து 76 இந்தியர்களும், 36 வெளிநாட்டினரும் இந்திய விமானப் படை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். 

கரோனா வைரஸ் (கொவைட்-19) தாக்கத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள சீனாவுக்கு மருத்துவ நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும், இதே விமானம் திரும்ப வரும்போது கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் இருந்து இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை இந்தியா அழைத்து வருவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, விமானப் படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் சுமார் 15 டன் அளவிலான மருத்துவ நிவாரணப் பொருள்களுடன் சீனாவின் வூஹான் நகரை புதன்கிழமை சென்றடைந்தது.

இந்நிலையில், இந்த விமானம் இன்று (வியாழக்கிழமை) இந்தியா திரும்பும்போது ஏற்கெனவே அறிவித்ததன்படி  76 இந்தியர்கள், 36 வெளிநாட்டினர் என மொத்தம் 112 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் 23, சீனாவைச் சேர்ந்தவர்கள் 6, மியான்மர் மற்றும் மாலத்தீவைச் சேர்ந்தவர்கள் தலா 2, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மடகாஸ்கரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் இந்தியா வந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், "சீனாவின் வூஹான் நகரில் இருந்து மூன்று விமானங்களின் மூலம் மொத்தம் 723 இந்தியர்களும், 43 வெளிநாட்டினரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்றது.

முன்னதாக, கடந்த 1, 2 ஆகிய தேதிகளில் இரு சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 647 இந்தியர்கள் வூஹானிலிருந்து தில்லிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள், இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, மானேசரிலும் தில்லியிலும் தனி மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சுமார் 14 நாள்கள் கண்காணிப்புக்குப் பின்னர், அவர்கள் வீடு திரும்பினர். தற்போதைய விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ளவர்களும் தனி முகாமில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com