கண்டுகொள்ளப்படாத ஆளும்கட்சி கூட்டணி எம்.பியின் போன் அழைப்பு: தில்லி வன்முறை குறித்து அதிர்ச்சித் தகவல்

தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆளும்கட்சி கூட்டணி எம்.பி ஒருவர் காவல்துறைக்கு போன் செய்து புகார் அளித்தும் மதிப்பில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நரேஷ் குஜ்ரால்
நரேஷ் குஜ்ரால்

புது தில்லி: தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆளும்கட்சி கூட்டணி எம்.பி ஒருவர் காவல்துறைக்கு போன் செய்து புகார் அளித்தும் மதிப்பில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளி மாலை துவங்கி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆளும்கட்சி கூட்டணி எம்.பி ஒருவர் காவல்துறைக்கு போன் செய்து புகார் அளித்தும் மதிப்பில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் பாஜகவின் கூட்டணிக்கட்சியாக இருப்பது சிரோன்மணி அகாலி தள் கட்சி. இக்கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நரேஷ் குஜ்ரால். இவர் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் மகனாவார்.

இவருக்கு புதன் இரவு 11.30 மணியளவில் தெரிந்த நபர் ஒருவரிடம் இருந்து போன் வந்துள்ளது. அதில் அந்த நபரும் மற்றும் 15 இஸ்லாமியர்களும், வடகிழக்கு தில்லியின் மவுஜ்புரில் உள்ள கோண்டா சவுக் என்னும் இடத்தில உள்ள வீடு ஒன்றில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைய முயற்சிப்பதாகவும் நரேஷ் குஜ்ராலிடம் தெரிவித்துள்ளார்.  

இதனால் பதறிய நரேஷ் உடனடியாக தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, சூழலை விளக்கிச் சொல்லி நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார். சரியாக 10 நிமிடங்கள் கழித்து 11.43 மணியளவில் அவருக்கு தில்லி காவல்துறையிடம் இருந்து, அவரது புகார் பதிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட இடத்திற்கு காவல்துறை செல்லவில்லை. குறிப்பிட்ட நபர்களுக்கு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த நரேஷ் குஜரால் தற்போது தில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக், தில்லி துணை நிலை ஆளுநர் அனி ல் பைஜால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் , 'ஒரு நாடாளுமன்ற எம்.பி நேரடியாக போன் செய்து புகார் அளித்தே இதுதான் கதி என்றால், காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்க தில்லியின் சில பகுதிகள் எரிவதால் ஆச்சர்யம் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், '1984-இல் நடந்ததை போன்று காவல்துறையினர் தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்காமல் இருக்கும் சூழலினால் சிறுபான்மையின மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com