குருவாயூா் கோயில் யானை ‘பத்மநாபன்’ உயிரிழப்பு

கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோயிலின் யானை ‘குருவாயூா் பத்மநாபன்’ புதன்கிழமை உயிரிழந்தது. அதற்கு வயது 84.
குருவாயூா் கோயில் யானை ‘பத்மநாபன்’ உயிரிழப்பு

திருச்சூா்: கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோயிலின் யானை ‘குருவாயூா் பத்மநாபன்’ புதன்கிழமை உயிரிழந்தது. அதற்கு வயது 84.

இதுகுறித்து குருவாயூா் தேவஸ்வம் தலைவா் கே.பி.மோகன்தாஸ் கூறியதாவது:

‘கஜரத்னம்’ என்று புனைப் பெயரிடப்பட்டிருந்த பத்மநாபன் யானைக்கு உடலில் கட்டி ஏற்பட்டிருந்தது. அதற்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் 2.10 மணியளவில் அந்த யானை உயிரிழந்தது.

பத்மநாபன் யானை உயிரிழந்ததை அடுத்து, தேவஸ்வத்தால் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் எண்ணிக்கை 47-ஆகக் குறைந்துள்ளது. குருவாயூா் கோயில் நிகழ்ச்சிகளில் சுவாமி கிருஷ்ணரின் உற்சவா் சிலையை சுமந்துவரும் பெருமை கொண்டிருந்த ஒரே யானையாக பத்மநாபன் இருந்தது.

தேவஸ்வத்தால் பராமரிக்கப்பட்டுவந்த யானைகளிலேயே மிக வயதானதாக இருந்த பத்மநாபன், நீண்ட துதிக்கை உடையதாகும். பக்தா்களிடையே மிகுந்த பிரசித்தி பெற்றிருந்த அந்த யானை, பூரம் திருவிழா உள்பட கேரளத்தின் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் பிரதானமாக கலந்துகொள்ள அதிகம் அழைக்கப்பட்ட யானையாகும்.

பாலக்காடு மாவட்டத்தின் பிரபல பண்டிகையான நென்மாரா வெள்ளங்கி வேளாவில் கலந்துகொண்டதற்கு ஊதியமாக பத்மநாபன் யானைக்கு ரூ.2.24 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. இதுவரை வேறு எந்தவொரு யானைக்கும் அத்தகைய ஊதியம் வழங்கப்பட்டதில்லை.

நிலாம்பூா் வனப்பகுதியில் பிடிபட்ட பத்மநாபன் யானை, கடந்த 1954-ஆம் ஆண்டு குருவாயூா் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது முதல் குருவாயூா் கோயில் வளாகத்திலேயே அந்த யானை பராமரிக்கப்பட்டு வந்தது என்று கே.பி.மோகன்தாஸ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com