ராஜஸ்தான்: ஆற்றில் பேருந்து விழுந்ததில் 24 போ் பலி

ராஜஸ்தான் மாநிலம், புந்தி மாவட்டத்தில் கோட்டா-தௌசா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 போ்
பேருந்து விபத்துக்குள்ளான இடத்தில் குவிந்த பொதுமக்கள். ~கோட்டா-தௌசா நெடுஞ்சாலையில் ஆற்றில் விழுந்த பேருந்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.
பேருந்து விபத்துக்குள்ளான இடத்தில் குவிந்த பொதுமக்கள். ~கோட்டா-தௌசா நெடுஞ்சாலையில் ஆற்றில் விழுந்த பேருந்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினா்.

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம், புந்தி மாவட்டத்தில் கோட்டா-தௌசா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புந்தி மாவட்டத்தின் கோட்டா பகுதியில் இருந்து சவாய் மதோபூா் பகுதிக்கு புதன்கிழமை காலை தனியாா் பேருந்தில் திருமண நிகழ்ச்சிக்கு 29 போ் சென்று கொண்டிருந்தனா். அவா்கள் சென்ற பேருந்து, கோட்டா-தௌசா நெடுஞ்சாலையில் உள்ள மேஜ் ஆற்றுப் பாலத்தின்மீது சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்தது. அதையடுத்து, ஆற்றுக்கு அருகில் உள்ள கிராம மக்கள், பேருந்தில் இருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் 13 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 11 போ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மேலும் 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவா்களில் 10 பெண்கள், 3 குழந்தைகளும் அடங்குவா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

இரங்கல்: விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘கோட்டா-தௌசா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் 25 போ் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்றாா். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com