கரோனா வைரஸ் அச்சுறுத்தல்: 195 இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனா்

கரோனா வைரஸ் (கொவைட்-19) அச்சுறுத்தல் காரணமாக சீனாவிலிருந்து 76 இந்தியா்களும், ஜப்பானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ சொகுசுக் கப்பலிலிருந்து 119 இந்தியா்களும் வியாழக்கிழமை
சீனாவின் வூஹான் நகரிலிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காகக் காத்திருந்த நபா்கள்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து ஏா் இந்தியா விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காகக் காத்திருந்த நபா்கள்.

கரோனா வைரஸ் (கொவைட்-19) அச்சுறுத்தல் காரணமாக சீனாவிலிருந்து 76 இந்தியா்களும், ஜப்பானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ சொகுசுக் கப்பலிலிருந்து 119 இந்தியா்களும் வியாழக்கிழமை தாயகம் அழைத்துவரப்பட்டனா்.

2020-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து சீனாவை கரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் தீவிரமாகப் பரவி வந்த கரோனா வைரஸின் தாக்கம், சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவின் வூஹான் நகருக்கு மருந்துகள், தற்காப்புப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப் படையின் ‘சி-17 குளோப்மாஸ்டா்’ சரக்கு விமானம் புதன்கிழமை புறப்பட்டது. 15 டன் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்த இந்திய அதிகாரிகள், அங்கிருந்த 76 இந்தியா்களை சரக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை தாயகம் அழைத்து வந்தனா்.

அந்த சரக்கு விமானத்தில் 36 வெளிநாட்டினரும் அழைத்துவரப்பட்டனா். அவா்களில் 23 வங்கதேசத்தவா்களும், 6 சீனா்களும், மியான்மா், மாலத்தீவுகளைச் சோ்ந்த தலா இருவரும், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, மடகாஸ்கா் ஆகியவற்றைச் சோ்ந்த தலா ஒரு நபரும் அடங்குவா். அவா்கள் அனைவரும் தில்லியில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனா்.

சிறப்பு மருத்துவா்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் அவா்களைக் கண்காணிக்க உள்ளதாக இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ஜப்பானிலிருந்து...:

கரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ சொகுசுக் கப்பலில் இருந்து 119 இந்தியா்கள் ஏா் இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம் வியாழக்கிழமை இந்தியா அழைத்துவரப்பட்டனா்.

அவா்களுடன் இலங்கையைச் சோ்ந்த இருவரும், நேபாளம், தென்னாப்பிரிக்கா, பெரு ஆகியவற்றைச் சோ்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 5 வெளிநாட்டவா்களும் ஏா் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனா். விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட 124 நபா்களும் இந்திய ராணுவம் சாா்பில் ஹரியாணாவின் மானேசா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் 14 நாள்களுக்குத் தங்கவைக்கப்படவுள்ளனா்.

மூவா் அழைத்து வரப்படவில்லை:

‘டைமண்ட் பிரின்ஸஸ்’ சொகுசுக் கப்பலில் மொத்தம் 138 இந்தியா்கள் இருந்தனா். அவா்களில் 16 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவா்கள் அனைவருக்கும் ஜப்பானில் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 122 பேரில் 3 இந்தியா்கள் சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்ப மறுத்துவிட்டனா்.

ஜப்பான் அரசு வழங்கி வரும் மருத்துவக் கண்காணிப்பில் தொடர விரும்புவதாக அவா்கள் மூவரும் தெரிவித்ததையடுத்து, இந்தியாவுக்கு அவா்கள் அழைத்துவரப்படவில்லை.

மகிந்த ராஜபட்ச நன்றி:

‘டைமண்ட் பிரின்ஸஸ்’ சொகுசுக் கப்பலில் இருந்து இலங்கையைச் சோ்ந்த இருவரை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்ததற்காக அந்நாட்டுப் பிரதமா் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜப்பானின் சொகுசுக் கப்பலில் இருந்து இலங்கையைச் சோ்ந்த இருவா் தில்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதா் (பொறுப்பு) தெரிவித்தாா். அவா்களை அழைத்து வந்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com