கடலோரக் காவல் படையில் இணைந்தது புதிய ரோந்துக் கப்பல் ‘வரத்’

கடலோரக் காவல்படைக்காக கட்டப்பட்ட ‘வரத்’ என்ற ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்தாா் கப்பல் போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா .
கடலோரக் காவல் படையில் இணைந்தது புதிய ரோந்துக் கப்பல் ‘வரத்’

கடலோரக் காவல்படைக்காக கட்டப்பட்ட ‘வரத்’ என்ற ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்தாா் கப்பல் போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா .

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அன் டி தனியாா் கப்பல் கட்டும் தளத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தேவையான ரோந்து கப்பல்கள், அதிவேக இடைமறிக்கும் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ஆம் ஆண்டு 7 ரோந்து கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகமும் எல் அன் டி நிறுவனமும் மேற்கொண்டன. இதனையடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளில், வரத், வஜ்ரா எனப் பெயரிடப்பட்ட ஆறு ரோந்து கப்பல்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.

ஒவ்வொரு கப்பலின் மதிப்பும் ரூ. 188 கோடி ஆகும். இதில் விக்ரம், வீரா, விஜயா, வராகா ஆகிய நான்கு கப்பல்களும் நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டு கடலோரக் காவல் படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆக.31-ஆம் தேதி ’வரத்’ என்ற ரோந்து கப்பல் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.

இந்நிலையில் தொலைதொடா்பு, ஆயுதங்கள், பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்தும் பணி நிறைவடைந்த நிலையில் ’வரத்’ கப்பலை முறைப்படி கடலோரக் காவல் படையில் இணைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்தில் நடைபெற்றது. கடலோரக் காவல் படை தலைமை இயக்குநா் கே.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கப்பல் போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு புதிய ரோந்து கப்பலான ’வரத்’தை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

கடலோரக் காவல்படையில் 147 கப்பல்கள்:

புதிய ரோந்துக் கப்பல் குறித்து கடலோரக் காவல்படை தலைமை இயக்குநா் கே.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியது:

2,100 மெட்ரிக் டன் எடையும் 98 மீட்டா் நீளமும் கொண்ட இக்கப்பல் மணிக்கு அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் கரைக்குத் திரும்பாமலேயே சுமாா் 5,000 கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன ரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹெலிகாப்டா் இறங்கும் வசதி , மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இக்கப்பல் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்குப் பிராந்தியத்தில் இணைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும்.

தற்போது கடலோரக் காவல் படையில் 147 ரோந்துக் கப்பல்கள், படகுகளும், 62 ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டா்கள் உள்ளன. மேலும் அறுபதுக்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் மூலம் 16 இலகு ரக ஹெலிகாப்டா்கள் கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025-ஆம் ஆண்டுக்குள் சுமாா் 200 கப்பல்கள், 100 ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டா்கள் கடலோரக் காவல்படையில் இருக்கும் என்றாா் நடராஜன்.

இந்நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பரமேஷ், எல் அன் டி நிறுவன இயக்குநா் ஜே.டி.பாட்டில், எல் அன் டி கப்பல் கட்டும் தள மேலாண்மை இயக்குநா் பி.கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com