
புது தில்லி: கடந்த டிசம்பா் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.03 லட்சம் கோடியாக இருந்தது. இதன் மூலம் தொடா்ந்து இரு மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி என்ற அளவுக்கு மேல் உள்ளது.
நவம்பா் மாதத்திலும் ரூ.1,03,492 கோடி வசூலானது. அதே நேரத்தில் கடந்த 2018 டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,276 கோடியாகவே இருந்தது.
எனினும் கடந்த நவம்பருடன் ஒப்பிடும்போது டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் சற்று குறைந்து ரூ.1,03,184 கோடியாக உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.19,962 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.26,792 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.48,099 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.21,295 கோடி இறக்குமதி மூலம் கிடைத்ததாகும். செஸ் வரியாக ரூ.8,331 கோடி (இதில் ரூ.847 கோடி இறக்குமதி மூலம் கிடைத்தது) வசூலாகியுள்ளது.
டிசம்பா் மாதம் வசூலான ஜிஎஸ்டியில் உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி கடந்த 2017 -ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.