Enable Javscript for better performance
தில்லி ஜேஎன்யு வளாகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல்: 50 மாணவர்கள் காயம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தில்லி ஜேஎன்யு வளாகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல்: 50 மாணவர்கள் காயம்

    By  நமது நிருபர்  |   Published On : 06th January 2020 03:07 AM  |   Last Updated : 06th January 2020 03:07 AM  |  அ+அ அ-  |  

    delhi

    தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் நடத்திய அமைதிப் பேரணியின்போது, முகமூடி அணிந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், சுமார் 50 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் நடத்திய பொதுக் கூட்டத்திலும், சபர்மதி விடுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
     ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தேர்வுப் பதிவை ஒத்திவைக்க கோரியும், கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது. ஜேஎன்யு மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணி பெரியார் விடுதி பகுதிக்குச் சென்றது. அப்போது, மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பேரணியில் ஈடுபட்ட மாணவர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் காயமடைந்த சுமார் 50 மாணவர்கள் எய்ம்ஸ் விபத்து காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், சதீஷ் சந்திரா ஆகியோர் இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தனர். "ஏபிவிபி அமைப்பினர், எங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்' என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
     ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும், சபர்மதி விடுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜேஎன்யு பேராசிரியை சுசரிதாவும் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
     ஏபிவிபி மறுப்பு: இதற்கிடையே, மாணவர் சங்கத்தின் குற்றச்சாட்டை ஏபிவிபி மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்வுப் பதிவுக்கு சென்ற மாணவர்கள் மீது இடதுசாரி ஆதரவு மாணவர்கள்தான் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     ஜேஎன்யு நிர்வாகம் விளக்கம்: இச்சம்பவம் தொடர்பாக ஜேஎன்யு பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஜேஎன்யு வளாகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை நிலவுகிறது. முகமூடி அணிந்தவர்கள் ஜேஎன்யு வளாகத்தில் ஆயுதங்களுடன் நடமாடுகிறார்கள். இவர்கள் மாணவர்களைத் தாக்குவதுடன், பல்கலைக்கழக சொத்துகளுக்கும் சேதம் விளைவித்து வருகிறார்கள்.
     இந்த நேரத்தில் மாணவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உதவி தேவைப்படும் மாணவர்கள் "100' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதனிடையே, ஜேஎன்யு நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் நுழைந்ததாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
     பல்கலைக்கழக வளாகத்தில் கொடி அணிவகுப்பு நடத்திய காவல்துறையினர், நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
     அறிக்கை கோரியது உள்துறை அமைச்சகம்: இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜேஎன்யு நிலவரம் குறித்து காவல் துறை உயரதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp