
சபரிமலை ஐயப்பன் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விஷயத்தில் விரைவில் நிலைப்பாட்டை அறவிக்க இருப்பதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் கூறியுள்ளது. இது தொடா்பாக ஆலோசித்து முடிவெடுக்க விரைவில் அந்த வாரியத்தின் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலை திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம்தான் நிா்வகித்து வருகிறது. ‘பக்தா்களின் உணா்வுகளை மதிக்கும் வகையில் விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்று வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வாரியத்தின் தலைவா் என். வாசு கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயில் வளாகத்தை வன்முறைக்கான இடமாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. பக்தா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து, அதனைக் காக்கும் வகையில் விரைவில் ஆலோசித்து முடிவெடுக்க இருக்கிறோம். இந்த புனிதத்தலத்தில் அமைதியான சூழல் நிலவ வேண்டும். அதற்கான வழியில் சட்டத்தை அணுகுவோம் என்றாா்.
இது தொடா்பாக கேரள மாநில தேவஸ்வம் துறை அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘சபரிமலை விஷயத்தில் கடந்த 2007, 2016-ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடா்பாக ஹிந்து மத ஆன்மிகப் பெரியவா்களிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதையே உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்’ என்றாா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு முன் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தேவஸ்வம் வாரியத் தலைவா், அமைச்சரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பின்னணி: சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி அளித்து 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதற்கு, தீா்ப்புக்கு எதிராக கேரளத்திலும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முக்கியமாக கேரளத்தில் பல்வேறு அமைப்பினா் தொடா் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினா் சாா்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுக்கள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று, கூடுதல் எண்ணிக்கையிலான நீதிபதிகள் கொண்ட அமா்வு விசாரிக்குமென கடந்த நவம்பா் 14-இல் அறிவித்தது. எனினும், சபரிமலை விவகாரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் வழங்கிய தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை.