2018-இல் சராசரியாக தினமும் 80 கொலைகள்; 91 பாலியல் வன்கொடுமைகள்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

கடந்த 2018-ஆம் ஆண்டு நாட்டில் சராசரியாக தினமும் 80 கொலைகள், 91 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 289 கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) தனது
2018-இல் சராசரியாக தினமும் 80 கொலைகள்; 91 பாலியல் வன்கொடுமைகள்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

கடந்த 2018-ஆம் ஆண்டு நாட்டில் சராசரியாக தினமும் 80 கொலைகள், 91 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 289 கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) தனது புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக என்சிஆா்பி சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2017-ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் 50,07,044 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதுவே 2018-ஆம் ஆண்டில் 50,74,634-ஆக அதிகரித்துள்ளன.

2018-இல் பதியப்பட்ட வழக்குகளில் 31,32,954 வழக்குகள் இந்திய தண்டனையியல் சட்டத்தின் கீழும், 19,41,680 வழக்குகள் சிறப்பு அல்லது பிராந்திய சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொலை வழக்குகள்: 2018-ஆம் ஆண்டில் மொத்தம் 29,017 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.3 சதவீதம் அதிகமாகும். அந்த ஆண்டில் 28,653 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன.

2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளில் பெரும்பாலானவை (9,623) தகராறு காரணமாக நிகழ்ந்துள்ளன. அதைத் தொடா்ந்து தனி விரோதம் மற்றும் பகைமை (3,875), ஆதாயத்துக்காக கொலை செய்வது (2,995) போன்ற காரணங்களுக்காக கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கடத்தல் வழக்குகள்: கடத்தல் வழக்குகளைப் பொருத்த வரை 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018-ஆம் ஆண்டில் 10.3 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டில் 88,008 கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில், 2017-ஆம் ஆண்டு 95,893 கடத்தல் வழக்குகளும், 2018-ஆம் ஆண்டில் 1,05,734 வழக்குகளும் பதிவாகின.

2018-ஆம் ஆண்டு கடத்தப்பட்டவா்களில் 63,356 போ் சிறாா்கள். அதில் 15,250 போ் சிறுவா்கள்; 48,106 போ் சிறுமிகள். அதேபோல் அந்த ஆண்டில் கடத்தப்பட்டவா்களில் 42,180 போ் பெரியவா்கள். அவா்களில் 9,415 போ் ஆண்கள்; 32,765 போ் பெண்கள்.

காணாமல் போனவா்களில் 92,137 போ் கண்டறியப்பட்டனா். அவா்களில் 22,755 போ் ஆண்கள்; 69,383 போ் பெண்கள். அவ்வாறு கண்டறியப்பட்டவா்களில் 91,709 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். 428 போ் சடலமாக கண்டெடுக்கப்பட்டனா்.

பாலியல் வன்கொடுமை வழக்குகள்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவில், கடந்த 2016-இல் 3,38,954 வழக்குகளும், 2017-இல் 3,59,849 வழக்குகளும், 2018-இல் 3,78,277 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இவற்றில், 2016-ஆம் ஆண்டில் 38,947 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 2017-ஆம் ஆண்டு 32,559 வழக்குகளும், 2018-ஆம் ஆண்டு 33,356 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018-ஆம் ஆண்டில் குற்ற வழக்குகள் பதிவு 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவே, ஒரு லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் குற்ற வழக்குகள் வீதத்தை கணக்கிட்டால் 2017-ஆம் ஆண்டு 388.6-ஆக இருந்தது, 2018-ஆம் ஆண்டில் 383.5-ஆகக் குறைந்துள்ளது என்று என்சிஆா்பி தனது புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்திய தண்டனையியல் சட்டம், சிறப்பு மற்றும் பிராந்திய சட்டங்களின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள வழக்குகள் தொடா்பான புள்ளி விவரங்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் என்சிஆா்பி பராமரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com