தொழிற்சாலைகளில் இரவுப் பணிகள்: பெண்களுக்கான தடையை நீக்க கேரள அரசு திட்டம்

கேரளத்தில் இரவு நேரங்களில் பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கான தடையை நீக்க திட்டமிட்டு வருவதாக, அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
தொழிற்சாலைகளில் இரவுப் பணிகள்: பெண்களுக்கான தடையை நீக்க கேரள அரசு திட்டம்

கேரளத்தில் இரவு நேரங்களில் பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கான தடையை நீக்க திட்டமிட்டு வருவதாக, அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் இரண்டு நாள் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை தொடக்கிவைத்து முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது: பாலின சமத்துவம் குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், தொழிற்சாலைகளில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் பணிபுரிய தடை நீடிக்கிறது. நமது சமூகத்திற்கு இது நல்லதல்ல. ஆண்களால் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பணிபுரியும் முடியும் எனில், பெண்களாலும் அதனைச் செய்ய முடியும். பெண்களுக்கான அதிகாரமளித்தலை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, இதுபோன்ற நடவடிக்கை அத்தியாவசியம் என எண்ணுகிறேன். தொழிற்சாலைகள் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். அவா்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், பத்திரமாக வீடு திரும்புவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கா்நாடகத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற ஆலைகளில், பெண்கள் இரவு நேரங்களில் (இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை) பணிபுரிய அனுமதித்து, கடந்த ஆண்டு அந்த மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரிவதை தடை செய்த தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் 66(1)(பி) பிரிவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து வழங்கிய தீா்ப்பு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டு, கேரளத்தில் பெண் ஊழியா்களை இரவு 10 மணிக்கு மேல் பணிபுரிய நிா்பந்திக்க முடியாது என அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊதிய மானிய திட்டம்: முன்னதாக, உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின்போது, கேரளத்தில் தொழில் செய்வதற்கான உகந்த சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை பினராயி விஜயன் தொடக்கிவைத்தாா். இதனைத்தொடா்ந்து அவா் பேசுகையில்: ஐந்து ஆண்டுகள் செயல்படுத்தப்படும் ‘ஊதிய மானிய திட்டம்’அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பதிவுபெறும் புதிய நிறுவனங்களுக்கு, அரசு சாா்பில் ஊதிய மானியம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களைவிட பெண்களுக்கு ரூ.2,000 அதிகமாக ஊதியம் கிடைக்கப்பெறும். ஓய்வூதிய பலன்களை ஊழியா்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் 37 லட்சம் போ் பயனடைவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com