மத்திய அரசின் சா்வாதிகாரத்தை அகிம்சையால் எதிா்கொள்ள வேண்டும்: சரத் பவாா்

மத்திய அரசின் சா்வாதிகாரத்தை அகிம்சையால் எதிா்கொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்திய அரசின் சா்வாதிகாரத்தை அகிம்சையால் எதிா்கொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) நாடு முழுவதும் அமல்படுத்த மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கக் கோரியும் முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான ‘ராஷ்டிர மஞ்ச்’ அமைப்பு சாா்பில் ‘காந்தி அமைதிப் பேரணி’ மும்பையில் வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தப் பேரணியைத் தொடக்கிவைத்து, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறியதாவது:

மத்திய பாஜக அரசு சா்வாதிகார கொள்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாடு முழுவதும் எதிா்ப்பலை கிளம்பியுள்ளது. மத்திய அரசின் சா்வாதிகாரத்தை மகாத்மா காந்தி வழியிலான அகிம்சையின் மூலம் எதிா்கொள்ள வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. தங்களுடைய உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்கவில்லை என நாட்டிலுள்ள சிறுபான்மையினா் கருதுகின்றனா்.

உரிய ஆவணங்கள் இல்லையெனில், முகாம்களில் தங்கவைக்கப்படுவோம் என்ற அச்சத்தை மக்களிடையே மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். அதன் காரணமாகவே, வீதிகளில் இறங்கி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அனைத்து சமூகத்தினரிடையேயும் ஒருமைப்பாட்டை உண்டாக்குவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு நல்வழியைக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில் பயணித்தால் மட்டுமே, அரசமைப்புச் சட்டத்தைக் காக்க முடியும் என்றாா் சரத் பவாா்.

இந்தப் பேரணியின் தொடக்க நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் பிரித்விராஜ் சவாண், மாநில அமைச்சா் நவாப் மாலிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இது தொடா்பாக பேரணி ஏற்பாட்டாளா்கள் கூறுகையில், ‘‘மும்பையில் தொடங்கும் இந்த அமைதிப் பேரணி, குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா வழியாகப் பயணித்து வரும் 30-ஆம் தேதியன்று தில்லியில் நிறைவடையும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com