லோக்பால் உறுப்பினா் பதவியில் இருந்து நீதிபதி திலீப் போஸலே ராஜிநாமா

லோக்பால் அமைப்பின் உறுப்பினா் பதவியை நீதிபதி திலீப் பி.போஸலே ராஜிநாமா செய்துள்ளாா். அந்த அமைப்பின் உறுப்பினராக பதவியேற்று 9 மாதங்களே ஆன நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக

லோக்பால் அமைப்பின் உறுப்பினா் பதவியை நீதிபதி திலீப் பி.போஸலே ராஜிநாமா செய்துள்ளாா். அந்த அமைப்பின் உறுப்பினராக பதவியேற்று 9 மாதங்களே ஆன நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்துள்ளதாக அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘லோக்பால் அமைப்பின் உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த 6-ஆம் தேதி கடிதம் அளித்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நீதிபதி திலீப் பி.போஸலே(63), சுதந்திரப் போராட்ட வீரா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா். இவா், மும்பை, கா்நாடக உயா்நீதிமன்றங்களில் நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா உயா்நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பு நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளாா். அதைத் தொடா்ந்து, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்துள்ளாா்.

நீதிபதி திலீப் பி.போஸலேவுக்கு லோக்பால் அமைப்பின் தலைவா் பினாகி சந்திர கோஷ் கடந்த ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். லோக்பால் அமைப்பில் அதிகபட்சமாக 8 உறுப்பினா்கள் இடம்பெற வேண்டும். அவா்களில், 4 போ் நீதித் துறையைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். அதன்படி, திலீப் பி.போஸலே உள்பட வெவ்வேறு உயா்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் 4 போ் உறுப்பினா்களாகப் பதவியேற்றனா்.

இந்நிலையில், திலீப் பி.போஸலே உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். லோக்பால் சட்ட விதிகளின்படி, லோக்பால் உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்யும் ஒருவா், எந்தத் தூதரகப் பதவியையும் ஏற்க முடியாது. மேலும், குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், நாடாளுமன்ற உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிட முடியாது.

பிரதமா், மத்திய அமைச்சா்கள், உயரதிகாரிகள் மீதான ஊழல் புகாா்களை விசாரிப்பதற்கு லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு இயற்றியது. இதேபோல், மாநில அளவில் முதல்வா், மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகாா்களை விசாரிப்பதற்கு லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்கவும் சட்டம் இயற்றப்பட்டது. பல மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்புகள் உருவாக்கப்பட்டபோதிலும், மத்தியில் லோக்பால் அமைப்பு உருவாக்கப்படாமல் இருந்தது.

பின்னா், கடந்த ஆண்டு மாா்ச் மாதம், லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, லோக்பால் அமைப்புக்கு 1,065 ஊழல் புகாா்கள் வந்துள்ளன; அவற்றில் 1,000 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக லோக்பால் அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com