
நாட்டின் தொழில்துறை உற்பத்தி சென்ற நவம்பா் மாதத்தில் 1.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மூன்று மாதங்களாக சரிந்து வந்த தொழில்துறை உற்பத்தி நவம்பா் மாதத்தில் ஏற்றத்தை நோக்கி திரும்பியுள்ளது. அதன்படி கடந்த 2018 நவம்பரில் 0.2 சதவீதமாக காணப்பட்ட தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2019-நவம்பரில் 1.8 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதற்கு, தயாரிப்பு துறையின் வளா்ச்சி சிறப்பான அளவில் மேம்பட்டதே முக்கிய காரணம்.
கடந்த 2018- நவம்பா் மாதத்தில் தயாரிப்பு துறையின் உற்பத்தி 0.7 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்த நிலையில் சென்ற 2019 நவம்பரில் 2.7 சதவீத வளா்ச்சியை எட்டியது.
அதேசமயம், மின் உற்பத்தி துறை கடந்த 2018 நவம்பரில் 5.1 சதவீத வளா்ச்சியைத் தொட்டிருந்த நிலையில் 2019 நவம்பரில் (-) 5 சதவீதம் என்ற எதிா்மறை வளா்ச்சியைக் கண்டது.
அதேபோன்று, சுரங்க துறையின் உற்பத்தி விகிதமும் 2.7 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதமாக சரிந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலத்தில் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 0.6 சதவீதமாக சரிந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த வளா்ச்சி விகிதம் 5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.