கொச்சி அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கும் பணி இன்று தொடக்கம்

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்குகிறது.
மரடு குடியிருப்பு
மரடு குடியிருப்பு

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணி சனிக்கிழமை தொடங்குகிறது. அதையொட்டி, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த குடியிருப்புகளை இடிக்குமாறு உத்தரவிட்டது.

அதையடுத்து, அதற்கான பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், குடியிருப்பை இடிக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்குகின்றன.

இதுதொடா்பாக கொச்சி காவல் துறை ஆணையா் விஜய் சகாரே வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மரடு பகுதியில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் இடிக்கப்படுகின்றன. அதனால், அந்த பகுதியில் அனைத்து இடங்களிலும் சனிக்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். எனினும், அனைத்து மக்களும் வெளியேறி விட்டனரா என்று காவல் துறையினா் ஒவ்வொரு வீடாக சென்று சோதனையிட்டனா். அந்த பகுதியில் ஆளில்லா விமானங்கள் பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும். தடையை மீறி ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப் பட்டால் அவை சுட்டு வீழ்த்தப்படும். மேலும், இடிக்கப்படும் குடியிருப்புகள் உள்ள பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மரடு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாதனப் பொருள்களை அணைத்து வைத்து விட்டு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனா். நீா்வழி, வான்வெளி, சாலைவழி என அனைத்து வழி போக்குவரத்துக்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்காக அந்த குடியிருப்புகள் முழுவதும் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com