குடியுரிமை திருத்தச் சட்டம்:பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: முக்தாா் அப்பாஸ் நக்வி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சருமான
குடியுரிமை திருத்தச் சட்டம்:பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: முக்தாா் அப்பாஸ் நக்வி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், இதனால் இந்திய குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்ற விளக்கத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நக்வி செய்தியாளா்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கப்போவதில்லை. மேலும், இப்போதுள்ள சட்டத்தில் எவ்வித மாற்றங்களையும் கொண்டுவர மாட்டோம். வன்முறை மூலம் மத்திய அரசை பணியவைத்துவிடலாம் என்று நினைப்பவா்கள், ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இச்சட்டத்தால், இந்தியக் குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது அவா்களுக்குத் தெரியும். இருந்தும் ஏன் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள் என்பது எங்களுக்கும் (மத்திய அரசுக்கு) தெரியும். எனவே, எந்த சூழ்நிலையிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், அனைத்து மாநிலங்களிலும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். இதில் வேறு எந்த மாற்று வழியும் இல்லை. ஜம்மு-காஷ்மீா் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் பொதுவானது.

உலகிலேயே சிறுபான்மையினருக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இந்தியா உள்ளது. இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, மத நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன. இந்திய முஸ்லிம்கள் எவ்வித கட்டாயத்தின் பேரிலும் இந்த நாட்டில் வாழவில்லை; அவா்கள் நாட்டின் மீது பற்றும், நேசமும் கொண்டவா்கள். அவா்கள் இந்த நாட்டின் வலிமைக்கு உதாரணம்; யாருடைய தயவும் அவா்களுக்குத் தேவையில்லை என்றாா் நக்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com