முக்கியப் பிரமுகா்களுக்கான பாதுகாப்பு பணி:என்எஸ்ஜி-யை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு

முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை (என்எஸ்ஜி) முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களை (என்எஸ்ஜி) முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1984-இல் உருவாக்கப்பட்ட என்எஸ்ஜி படையின் கமாண்டோக்கள், இசட் பிளஸ் பிரிவின்கீழ், மிகவும் அச்சுறுத்தல் உள்ள 13 முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனா். அதன்படி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வா்கள் மாயாவதி, முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல், ஃபரூக் அப்துல்லா, அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால், பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனா்.

பயங்கரவாத எதிா்ப்பு, விமானக் கடத்தல் முறியடிப்பு ஆகியவையே என்எஸ்ஜி உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும். எனவே, அந்த பணிக்காக மட்டுமே என்எஸ்ஜி கமாண்டோக்களை பயன்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலிருந்து என்எஸ்ஜி கமாண்டோக்கள் முழுமையாக திரும்பப் பெறப்பட உள்ளனா். என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளவா்களுக்கு இனி மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்விரு பாதுகாப்புப் படையினரும் ஏற்கெனவே 130 முக்கிய பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனா். தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள், சிஐஎஸ்எஃப் படை பாதுகாப்பில் உள்ளனா்.

இந்த நடவடிக்கையின் மூலம் சுமாா் 450 கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்படுவா். இது, என்எஸ்ஜியின் திறனுக்கு மேலும் வலுசோ்க்கும் என்று அப்படையின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் அமைந்த பிறகு, பல்வேறு முக்கிய பிரமுகா்கள், அரசியல் தலைவா்களுக்கான பாதுகாப்பு கடந்த ஜூலையில் மறுஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சுமாா் 1,300 கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

இதேபோல், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், அவரது மனைவி, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) பாதுகாப்பு அண்மையில் வாபஸ் பெறப்பட்டது. அதற்கு பதிலாக, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) பாதுகாப்பு வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com